திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு; தினமும் 400 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது தேசிய சுகாதார திட்ட மேலாண்மை சில்பா பிரபாகரன், தமிழ்நாடு சுகாதார மேலாண்மை இயக்குனர் கோவிந்தராஜ், மாநில ஊரக நலப்பணிகள் இயக்குனர் சண்முக கனி ஆகியோர் இருந்தனர். மருத்துவமனையில் உள்ள ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு சரியாக தலையணை வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் சுத்தமான தலையணை மற்றும் பெட்ஷீட் வழங்க உத்தரவிட்டார்.

இதன்பின்னர் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது; தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறேன். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனை 850 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் சென்டர் தொடங்கப்பட உள்ளது. மருத்துவர்களுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதன் அடிப்படையில் மருத்துவர்கள் இந்த மாதத்திற்குள்ளாக நியமிக்கப்பட்டு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக உபகரணங்கள் கொடுப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றில் இருந்து இரண்டு வருடங்களில் மருத்துவமனைகளில் கூடுதல் உபகரணங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.500 கோடியில் உபகரணங்கள் வாங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழையின் காரணமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனை நிர்வாகம், பொதுமக்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட்டால் டெங்குவை தடுக்க முடியும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் 300 முதல் 400 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அழுத்தத்தில் பணிபுரிகின்றனர். இவ்வாறு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

 

The post திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு; தினமும் 400 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: