முதலிடத்தில் மீண்டும் முகேஷ் அம்பானி இந்தியாவில் 1,319 பேரிடம் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து: அதானி சொத்து 57 சதவீதம் சரிவு

மும்பை: இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலை ஹூரன் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் முதல் முறையாக ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து கொண்டவர்கள் பட்டியலில் 1,319 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,103 பேரும், 2021ல் 1007 பேரும் ரூ.1000 கோடி சொத்து கொண்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில், ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.4.74 லட்சம் கோடியுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அம்பானியை விட அதானி சொத்து ரூ.3 லட்சம் கோடி அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதானியை விட அம்பானி ரூ.3.3 லட்சம் கோடி அதிகமாக வைத்துள்ளார். டாப்-10 பணக்காரர்கள் பட்டியலில் அவென்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவனம் ராதாகிஷன் தமானியின் சொத்து மதிப்பு மட்டுமே குறைந்துள்ளது.

தமானி 18 சதவீத சரிவுடன் 1.4 லட்சம் கோடியுடன் 8வது இடத்தில் இருக்கிறார். அதானி, அம்பானியை தொடர்ந்து சீரம் நிறுவன நிர்வாக இயக்குநர் சைரஸ் பூனவல்லா (ரூ.2.8 லட்சம் கோடி), எச்சிஎல் நிறுவனர் சிவ் நாடார் (ரூ.2.3 லட்சம் கோடி), இந்துஜா குழுமத்தின் கோபிசந்த் இந்துஜா (ரூ.1.8 லட்சம் கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

* கடந்த ஆண்டு ரூ.30,600 கோடி சொத்து மதிப்புடன் 49வது இடத்தில் இருந்த பைஜூஸ் நிறுவன தலைவர் பைஜூ ரவீந்திரன் கடும் சரிவால் இம்முறை பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

* ஜோஹோ நிறுவனத்தின் ராதா வேம்பு ரூ.36,000 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார பெண் தொழிலதிபராகி உள்ளார். நைகாவின் பல்குனி நாயர் இடத்தை ராதா வேம்பு பிடித்துள்ளார்.

* 1,319 பணக்காரர்களில் 328 பேர் மும்பையிலும், 199 பேர் டெல்லியிலும், 100 பேர் பெங்களூருவிலும் வசிக்கின்றனர்.

The post முதலிடத்தில் மீண்டும் முகேஷ் அம்பானி இந்தியாவில் 1,319 பேரிடம் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து: அதானி சொத்து 57 சதவீதம் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: