குறையும் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம்

 

உடுமலை, அக்.11: பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு காரணமாக திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பிஏபி தொகுப்பு அணைகளில் கடைசியாக உள்ள இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. 5 கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் உடுமலை நகரம் உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது. இது தவிர, திருமூர்த்திமலையில் பெய்யும் மழை காரணமாக பாலாறு வழியாகவும் அணைக்கு தண்ணீர் வருகிறது.

தற்போது, 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் பின்பகுதியில் புற்களாக காட்சி அளிக்கிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 41.36 அடியாக இருந்தது. கான்டூர் கால்வாய் மூலம் 310 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பாலாற்றில் நீர்வரத்து இல்லை. பாசனத்துக்காக பிரதான கால்வாயில் 890 கனஅடி நீரும், தளி வாய்க்காலில் 65 கன அடி நீரும், குடிநீருக்காக 21 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

The post குறையும் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் appeared first on Dinakaran.

Related Stories: