அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்ட்

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை தலைமை ஆணையர், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி வரை சாலையின் இருமருங்கிலும் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் ஏராளமான பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியை குட்டி சிவகாசி என்றழைக்கின்றனர்.

இதையடுத்து சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் ராமசாமி ரெட்டி, கடை அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர் அனில் ரெட்டி மற்றும் ராமசாமிரெட்டியின் மகன் நவீன் ரெட்டி ஆகிய மூவரையும் அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விபத்து குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறை தலைமை ஆணையர், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் அரசியல் மாநாடு, ஊர்வலம், திருமணங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே மாநிலம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும், வெடிக்க வேண்டும் எனவும் பசுமை பட்டாசுகள் தவிர்த்து வேறு பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: