தூய்மை ஆல்கஹாலுக்கு இரட்டை வரி; தமிழ்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு


புதுடெல்லி: ஜி.எஸ்.டியின் 52வது கவுன்சில் கூட்டம் டெல்லி சாணக்கியாபுரியில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் பவனில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாட்டின் தரப்பில் இருந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தமிழ்நாடு தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது: இறுதிப் பயன்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதன் மூலம் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் ( இ.என்.ஏ ) மீது ஜி.எஸ்.டி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றின் கீழ் இரண்டு விதமான வரி விதிக்கப்படுவது ஏற்க கூடியது கிடையாது.

இதுபோன்று இரட்டை வரிகள் விதிப்பதன் மூலம் நிர்வாக ரீதியிலான நடைமுறை சிக்கல் ஏற்படும். குறிப்பாக தமிழ்நாடு இந்த விவகாரத்தில் இறக்குமதியாளராக இருப்பதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இதேப்போன்று வெல்லப்பாகு மீதான ஜி.எஸ்.டி விகிதத்தை கணிசமான அளவு குறைப்பதாலும் மாநிலத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் தினை போன்ற சிறு தானியமான பொருட்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்கும் கூட்டத்தின் முன்மொழிவு,

அதேப்போன்று குறிப்பிட்ட ஒப்பந்த பணி சேவைகளில், தலைகீழ் வரி அமைப்பு காரணமாக சேரும் உள்ளீட்டு வரி வரவை, இனி வருங்காலங்களில் திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவு ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பேசினார். ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகவரித் துறை ஆணையர் தீரஜ் குமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை ஆல்கஹாலுக்கு இரட்டை வரி; தமிழ்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: