ஊட்டியில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஊட்டி : ஊட்டியில் உள்ள நீலகிரி நூலகத்தில் நடந்த 7வது இலக்கிய விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஊட்டியில் நேற்று 7வது இலக்கிய விழா நீலகிரி நூலகத்தில் நடந்தது. விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகன், முன்னாள் காவல்துறை இயக்குநர் விஜயகுமார், நடிகர் மற்றும் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி (கிட்டி) ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை நீலகிரி நூலகத் தலைவர் கீதா சீனிவாசன் வழங்கினார். தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், வாசகர்களின் கேள்விகளுக்கு பெருமாள் முருகன் பதில் அளித்தார்.

ஊட்டியில் நடக்கும் 7வது இலக்கிய விழாவின் ஒருங்கிணைப்பாளர் ராமன் கூறுகையில், பெரிதும்‌ எதிர்பார்க்கப்பட்ட 7வது ஊட்டி இலக்கிய விழா(ஊட்டிலிட்‌..பெஸ்ட்‌ 2023) இன்று (நேற்று) ஊட்டியில்‌ துவங்கியுள்ளது. இரு நாட்கள் நடக்கும் இவ்விழா நாளையும் (இன்று) நடக்கிறது. இலக்கியம்‌, கலாச்சாரம்‌. வரலாறு மற்றும்‌ பாரம்பரியம்‌ ஆகியவற்றின்‌ செழுமையை வண்ணமயமாக கொண்டாடப்பட உள்ளது.

இலக்கிய விவாதத்திற்கு அப்பால்‌, ஊட்டிலிட்‌..பெஸ்ட்‌ 2023 நீலகிரி உயிர்கோளத்தின்‌ சுற்றுச்சூழல்‌ முக்கியத்துவத்தையும்‌, பல்வேறு சமூகங்களையும்‌ விளக்கும்‌ வகையில்‌, நகரின்‌
இயற்கை சாரத்தை ஒளிரச்‌ செய்து,அதை தனித்துவமாக்குகிறது. திருவிழாவில்‌ முக்கியமான உரையாடல்கள்‌, புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன்‌ அறிவுசார்‌ விவாதங்கள்‌, நேரடி உரையாடல்கள்‌, கண்காட்சிகள்‌, கலை விளக்கங்கள்‌ மற்றும்‌ பல்வேறு வகையான இந்திய கிளாசிக்கல்‌,ப்ளூஸ்‌ மற்றும்‌ ஜாஸ்‌ கச்சேரிகள்‌ ஆகியவை நடைபெறும்‌. இது மலைகள்‌ உண்மையிலேயே உயிர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்‌. பல ஆண்டுகளாக, ஊட்டிலிட்‌..பெஸ்ட்‌ தமிழ்நாட்டின்‌ இலக்கியங்களை முன்வைக்கவும்‌, பாதுகாக்கவும்‌ மற்றும்‌ மேம்படுத்தவும்‌ ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டின்‌ தலைசிறந்த எழுத்தாளர்களில்‌ ஒருவரான பெருமாள்‌ முருகனுக்கு வாழ்நாள்‌ சாதனையாளர்‌ விருது வழங்கப்பட்டது. இலக்கியம்‌, வரலாறு, பாரம்பரியம்‌ ஆகியவற்றைக்‌ கொண்டாடுவதோடு, ஊட்டி இலக்கியத்‌ திருவிழாவின்‌ 7வது பதிப்பு செயலுக்கான அழைப்பு, பாதுகாப்பிற்கான அழைப்பு மற்றும்‌ கலாச்சார புரிதலை வளப்படுத்துவதற்கான அறைகூவல்‌ ஆகும்‌.பன்முகத்தன்மை, சூழலியல்‌ பொறுப்பு மற்றும்‌ இலக்கியத்தின்‌ ஆற்றலைத்‌ தழுவிய எதிர்காலத்தை எதிர்நோக்கும்‌ போது ஊட்டியின்‌ 200வது ஆண்டு விழாவைக்‌ கொண்டாடும்‌ ஒரு வழியாகும், என்றார்.

தொடர்ந்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதாவது: இது போன்ற பழமை வாய்ந்த ஊட்டி நகரில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது பெருமைக்குறியதாகும். எனது குடும்பத்தில் யாருக்கும் எழுத படிக்க தெரியாது.அதுபோன்ற பின்புலம் வாய்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். எழுத்தறிவு என்பது எனது தலைமுறையில் தான் வந்தது. அதற்கு அந்த காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு நன்றி கூற வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளை தொடங்கியதும், மதிய உணவு திட்டத்தை துவங்கியதுமே காரணம். துவக்கத்தில் எனக்கு எதைப் பார்த்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் எனது எட்டு வயது முதல் எழுத ஆரம்பித்து விட்டேன். 90களில் அறிமுகமான கோட்பாடுகள், பெண்ணியம், நவீன கோட்பாடுகளால் எனது எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.

நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு திருச்செங்கோடு.எனது ஊர் பெயரை வைத்து முதல் சிறுகதை தொகுப்பினை எழுதினேன். நான் பழகிய தடங்களில் செல்வதை தவிர்ப்பேன். வெவ்வேறு விஷயங்கள், வடிவங்களில் முயற்சி செய்து பார்ப்பேன். மாதொருபாகன் புத்தகத்தில் பால் உறவு,சாதி மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுவதாக எழுதியிருந்தேன். இதனை சில அரசியல் கட்சிகள் பொதுவுடைமைப்படுத்தி மக்களை தூண்டி போராட்டங்கள் நடத்தினர். எனது புத்தகங்களை எரித்தனர். நான் குடும்பத்தோடு ஊரை விட்டு செல்லும் அளவிற்கு அச்சுறுத்தல் இருந்தது, என்றார்.

The post ஊட்டியில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது appeared first on Dinakaran.

Related Stories: