பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலில் பொம்மை துப்பாக்கியுடன் கேரள இளைஞர்கள் பயணம்: 6 மணி நேரம் போலீசார் விசாரணை

நிலக்கோட்டை:பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் பொம்மை துப்பாக்கி வைத்திருந்த கேரளாவை சேர்ந்த இளைஞர்களிடம் 6 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல், மதுரை வழியாக நேற்று காலை திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் திண்டுக்கல்லை அடுத்து அம்பாத்துரை அருகே வந்தபோது, கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் நவீன ரக கைத்துப்பாக்கிகளை கைகளில் வைத்திருந்தனர். இதனை கண்ட சக பயணிகள், ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து கொடைரோடு ஸ்டேசனுக்கு கொடைரோடு ரயில்வே போலீசார், அம்மையநாயக்கனூர் போலீசார் என 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். ரயில் கொடைரோடு ஸ்டேசன் வந்ததும், இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப் (19), கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த 18 வயதானவர், காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்தது நவீன ரக துப்பாக்கி மாடலை சேர்ந்த பொம்மை துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தியதில், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவிற்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொண்டதால் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் கேரள போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் டிக்கெட் எடுக்காமல் வந்ததிற்கு அபராதம் விதித்து அவர்களை விடுவிடுத்தனர்.

The post பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலில் பொம்மை துப்பாக்கியுடன் கேரள இளைஞர்கள் பயணம்: 6 மணி நேரம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: