உரலா? சிவலிங்கமா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார், அவரது மார்க்கத்தை உலகில் பரப்புவதற்காக எழுபத்தி இரண்டு சிஷ்யர்களை நியமித்தார். இவர்களை சிம்மாசனாதிபதிகள் என்று அழைப்பார்கள். இந்த எழுபத்தி இரண்டு சிஷயர்களுள் ஒருவர்தான் மிளகு ஆழ்வார். இவர், உடையவர் மீதும் நம்பெருமான் மீதும் பரம விஸ்வாசத்துடன் இருந்தவர். சிறந்த பக்திமான் ஆவார். உடையவருக்கு தினமும் இரவு, பாலமுதம் தருவது இவரது வழக்கம். இவரது குணத்தைக் கண்டு, இவர்மீது உடையவருக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது.

அதனால், உடையவரின் மற்ற சீடர்கள் அவர் மீது பொறாமை கொண்டார்கள். மிளகு ஆழ்வார், உடைவருக்கு எங்கிருந்து பால்அமுதம் கொண்டு வந்து அளிக்கிறார் என்பதை, அவரைப் பின் தொடர்ந்து சென்று, பொறாமை கொண்ட சீடர்கள் அறிந்தார்கள். அறிந்தவர்கள், மிளகு ஆழ்வாரை ஒழித்துக் கட்ட ஒரு வழி கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.ஒரு முறை உடையவர் தனிமையில் இருக்கும்பொழுது சென்று, அவரது பொற்பாதக் கமலங்களை வணங்கினார்கள் இந்த சீடர்கள். வலது கை காட்டி அவர்களை ஆசிர்வதித்து, ராமானுஜாச்சாரியார் தெய்வீகப் புன்னகை பூத்தார்.

‘‘சுவாமி, தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும்’’ என்று கை கட்டி வாய் பொத்தி நின்று கொண்டார்கள், பொறாமை கொண்ட சீடர்கள். அதைக் கண்ட உடையவர், மென் புன்னகை பூத்து சொல்லும்படி செய்கை செய்தார்.‘‘சுவாமி, மிளகு ஆழ்வார் தங்களுக்கு தினமும் பால் அமுது படைக்க, பாலை எங்கிருந்து வாங்கி வருகிறார் என்பது அறிந்தீர்களானால், உள்ளம் வெதும்பிப்போவீர்கள். அப்படிபட்ட ஒரு அபசாரத்தை செய்கிறார் அவர்.’’ மிகவும் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு, உடையவரிடம் கோள் மூட்டினார்கள்.

‘‘அப்படி என்ன செய்தார்!’’ தெய்வீகம் பொங்க கேட்டார் ராமானுஜர். அதைக் கேட்ட சீடர்கள் மெல்ல சந்தோசப் புன்னகை பூத்தபடி விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்கள். ‘‘தினமும் இரவு அவர், திருவானைக்காவல் சென்று, அங்கு ஜம்புகேஸ்வரருக்கு அர்த்த ஜாம பூஜைகள் முடிந்தபின், அந்தணர்களுக்கு வழங்கப்படும் பாலை, வாங்கி வந்து தங்களுக்கு, பாலமுதமாக தருகிறார்.

வைஷ்ணவ ஆச்சாரியரான நீங்கள், மறந்தும் திருமாலை அன்றி மற்றொரு தெய்வத்தை வணங்காதவர். உங்கள் சீடர்களாகிய நாங்களும் உங்கள் வழியிலேயே நடந்து, மாலவனை அன்றி மற்றொருவரை வணங்காத கொள்கையை உடையவர்கள். அப்படிப்பட்ட தங்களுக்கு, சிவநிவேதன பிரசாதமாக வழங்கபடும் பாலை சமர்ப்பணம் செய்யலாமா? அது பெரும் அபசாரம் அல்லவா’’ எந்த வேலையைச் செய்ய எண்ணி வந்தார்களோ அதை வெற்றியோடு முடித்தார்கள் பொறாமைகொண்ட சீடர்கள்.

அவர்களைக் கண்டு, மெல்ல குறுநகை பூத்தார் உடையவர். ‘‘மிளகு ஆழ்வாரைக் கூப்பிடுங்கள்’’ புன்னகையின் ஊடே, உடையவரின் தெய்வீகக் குரல் கேட்டது. அதனைத் தொடர்ந்து வந்து சேர்ந்தார் மிளகு ஆழ்வார். நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து சேவித்தார்.

‘‘அப்பனே, திருவானைக்காவல் சென்று அங்கு சிவநிவேதனமாக அந்தணர்களுக்கு வழங்கப்படும் பாலைக் கொண்டுவந்து, எமக்குப் படைத்தாயா?’’ மென்மையான குரலில் கேட்டவர், பொறாமை கொண்ட சீடர்களையும் ஒரு முறை பார்த்தார். ‘‘உங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய, நேரம் வந்து விட்டது’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், மீண்டும் மிளகு ஆழ்வாரைப் பார்த்தார்.‘‘ஆம் சுவாமி’’ என்று பணிவாகச் சொல்லி வணங்கினார் மிளகு ஆழ்வார்.

‘‘இனி இதைப் போல அபசாரம் செய்யக்கூடாது’’ என்று எச்சரித்த உடையவர், அனைவருக்கும் விடை தந்து, ஆசிர்வதித்து அனுப்பினார்.மறுநாள் காலையில் உடையவருக்கு, உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகவே அவருக்கு கஷாயம் வைத்து கொடுத்தார் மிளகு ஆழ்வார். பணிவாக கஷாயம் அடங்கி இருந்த கிண்ணத்தை உடையவர் முன்பு வைத்து பணிந்தார் ஆழ்வார். பொறாமை கொண்ட சீடர்களும் கூடவேதான் இருந்தார்கள். அவர்கள், மெல்ல கஷாயம் நிறைந்திருந்த கிண்ணத்தை எட்டிப்பார்த்தார்கள். அவர்களின் முகம் கோபத்தால் சிவந்தது.

‘‘என்ன ஆழ்வாரே, ஒரு கஷாயம் வைக்ககூட தெரியாதா தங்களுக்கு. இப்படி மிளகை இடிக்காமல் கஷாயத்தில் சேர்த்தால், உடையவர் எப்படி பருகுவார்’’ கஷாயத்தில் மிதந்துகொண்டிருந்த முழு மிளகை பார்த்து கேட்டார்கள் அவர்கள்.‘‘மிளகை எப்படி இடிப்பது?’’ என்று ஒன்றும் அறியாதவர் போல, சற்றும் கலங்காமல் பதில் தந்தார் ஆழ்வார். ராமானுஜர் நடப்பதைப் புன்முறுவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘இதோ இதை வைத்துதான்’’ என்றபடி ஒரு சீடர், மிளகை இடிக்க பயன்படும் சிறு உரலை காட்டினார்கள். கல்லால் ஆன பெரிய கிண்ணம் போல இருந்தது அது. நடுவில் ஒரு குழி. அந்த குழிக்குள்ளே மிளகை போட்டு மற்றொரு நீள்வட்ட வடிவக் கல்லைக் கொண்டு இடிப்பார்கள். அதைத்தான் அந்த சீடர்கள் காட்டினார்கள்.‘‘நீங்கள் எந்த தெய்வத்தின் பிரசாதத்தை நான் உடையவருக்குக் கொடுத்ததாக சொன்னீர்களோ, அந்த தெய்வத்தின் வடிவத்தில் அல்லவா இருக்கிறது இந்த உரல்.

இதில் நான் மிளகை இடித்தால் அதுவும் சிவப்பிரசாதமாக தானே இருக்கும்?’’ என்று அந்த சீடர்களை மடக்கினார் மிளகு ஆழ்வார். அப்போதுதான், அந்த சிறிய உரல் ஒரு சிவலிங்க வடிவில் இருப்பதை உணர்ந்தார்கள் மற்ற சீடர்கள். மிளகு ஆழ்வாருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்கள். ஆனால் உடையவரோ, மிளகு ஆழ்வாரின் மதி கூர்மையை பெரிதும் புகழ்ந்தார்.

நிற்பன, நடப்பன, பறப்பன, உயிரற்றன, அசையாதன, என அனைத்திற்கும், உள் நின்று பொலிந்து அந்தர்யாமியாக விளங்குபவன் மாலவன் என்பதுதான் வைணவத்தின் தலையாய கொள்கை. ஆனால் அவ்வளவு, வைணவ நூல்களை படித்திருந்ததும், சிவபெருமான் உள்ளேயும் அந்த மாலவன் இருக்கிறான் என்பதை, சில சீடர்கள், பொறாமையால் மறந்து போனார்கள். அதை அவர்களுக்கு உணர்த்தவே ராமானுஜர் இப்படி ஒரு நாடகத்தை ஆடினார்.

ஒரு சிறு மிளகைக் கொண்டு பெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதால் `மிளகு ஆழ்வார்’ என்று பெயர் பெற்றார் இவர். சைவ வைணவத்தின் இடையே இவர் கொண்டிருந்த சமரச சிந்தனையை ராமானுஜர் பெரிதும் சிலாகித்தார் என்று வைணவ ஆச்சார்யர்களின், வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பான “குரு பரம்பரை’’ நூல் சொல்கிறது. நாமும், ராமானுஜர் வழி நின்று, மிளகு ஆழ்வாரைப் போல காண்பன அனைத்திலும் அந்த பரந்தாமனைக் கண்டு தரிசித்து, அவனது அருளை அடைவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post உரலா? சிவலிங்கமா? appeared first on Dinakaran.

Related Stories: