ஈரோடு, அக். 4: ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று மது விற்றதாக 5 பெண்கள் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 689 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் காந்திஜெயந்தியான நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் ஏசி பார்கள் என அனைத்திருக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டிருந்தார்.
டாஸ்மாக் கடைகள் விடுமுறையை பயன்படுத்தி, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜவகர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில், ஆப்பக்கூடல் அத்தாணி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதேபகுதியை சேர்ந்த குமரேசன் என்ற மாரியப்பன்(32), பவானியை சேர்ந்த காளியப்பன்(40) இருவரையும் கைது செய்து, 163 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பவானிசாகர் கொத்தமங்கலம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக ராஜூ(37) என்பவரை போலீசார் கைது செய்து, 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கருங்கல்பாளையத்தில் சங்கிலி மனைவி மல்லிகா(42), பவானிசாகரில் தனக்கோடி(68), கடத்தூரில் சரசாள்(62), ரேவதி(42), சித்தோட்டில் முனியம்மாள்(50) உட்பட மாவட்டம் முழுவதும் 58 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 689 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
The post ஈரோட்டில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 58 பேர் கைது: 689 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
