பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வாலிபரிடம் நூதன பண மோசடி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகவும், ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என பதிவு வந்துள்ளதை பார்த்துள்ளார்.

இதனால் அஜித் குமார், குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனக்கு நடிக்க ஆர்வம் உள்ளதாகவும், வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டிருந்த இளைஞர்கள் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணமாக முதலில் ரூ.2 ஆயிரம் கூகுள் பே மூலம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி அஜித்குமார் அவர்கள் கூறிய செல்போன் எண்ணிற்கு ரூ.2 ஆயிர் அனுப்பி உள்ளார். மேலும், அக்ரீமெண்ட் கட்டணமாக ரூ.8 ஆயிரமும், இன்டர்வியூக்காக ரூ.7 ஆயிரமும் என மொத்தம் ரூ.17 ஆயிரத்தை ஏமாற்றி விட்டு, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அஜித்குமார் செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகரன் மற்றும் கேரளாவை சேர்ந்த புகழேந்தி ஆகிய இருவரை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், இருவரும் சேர்ந்து தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

The post பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி வாலிபரிடம் நூதன பண மோசடி appeared first on Dinakaran.

Related Stories: