நவமான எண் 9 தரும் நன்மைகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண்களிலேயே 9 என்கிற எண்ணுக்கு ஒரு உயர்வு உண்டு. காரணம் அது நிலையான எண். அந்த எண்ணோடு எந்த எண்ணை பெருக்கினாலும், பெருக்கிக் கூட்டினாலும், அந்த எண் மாறாது. 9 ஆகவே இருக்கும்.

9×1=9
9×2=18=1+8=9
9×3=27=2+7=9
9×9=81=8+1=9

எண் கணித சாஸ்திரத்தில் 9

எண் வரிசையிலேயே 9-க்கு பிறகு எண்கள் கிடையாது. இனி வருகின்ற எண்களெல்லாம், ஒன்பது எண்ணோடு உள்ள கூட்டுத் தொகையை வைத்து வரும். அதனால் ஏறு வரிசை எண்களிலையே 9 என்றது பெரிய எண். சமய உலகில் ஒன்பது எண் (9) மிகச் சிறந்த எண்ணாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான கோயில் உற்சவங்கள் ஒன்பது நாள்கள் பெரிய உற்சவமாக நடத்தப்படுகிறது. எண் கணித சாஸ்திரத்தில் முதல் எட்டு எண்கள் வெவ்வேறு ஆங்கில எழுத்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த எண்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்பது என்கிற எண் எந்த எழுத்துக்கும் கொடுக்கப்படவில்லை. அது பூமி காரகனான செவ்வாய்க்கு உரிய எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, கர்மாவின் அமைப்பையும் அதன் பலனையும் உயர்வையும் சொல்லுகின்ற எண்ணாக 9 உள்ளது.

ஒன்பது பாடல்கள்

தமிழ் பக்தி இலக்கியத்தில் இறைவனைப் பற்றி அருளாளர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு பத்துப் பாடல்களையும் பதிகம் என்று குறிப்பிடுவார்கள். அதில் ஒன்பது பாடல்கள் இறைவனின் பெருமையையும், சிறப்பையும் சொல்லி, பத்தாவது பாடல் இந்த ஒன்பது பாடல்களைப் பாடுவதால் ஏற்படும் பலனைக் குறிப்பிடுவதாக (பலச் சுருதி) இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் 9

ஜோதிட சாஸ்திரத்தில் 9 என்கின்ற எண் யோகத்தைக் குறிப்பிடுகின்றது. ஒன்பதாம் இடத்தில் இருக்க கூடிய கிரகங்களும், ஒன்பதாம் இடத்துக்கு உரிய கிரகங்களும், மிகப்பெரிய நன்மையைச் செய்யும் என்பது ஜோதிடசாஸ்திர விதி. திரிகோண ஸ்தானத்தில் மூன்றாவது திரிகோணஸ்தானம் அது. பாக்கிய ஸ்தானம் என்று சொல்வார்கள். ஒருவருடைய குலதெய்வம், மூதாதையர்கள், மகிழ்ச்சி போன்ற பல உத்தமமான விஷயங்களை இந்த ஒன்பதாம் இடம் குறிப்பிடுகின்றது. இந்த ஸ்தானம் (பாக்கியஸ்தானம்) ஒரு ஜாதகத்தில் பலமடைந்துவிட்டால், மற்ற கிரகங்களாலும் ஸ்தானங்களாலும் வருகின்ற தீமைகளையும் தோஷங்களையும் பெருமளவு கட்டுப்படுத்தும். எனவே ஜாதகத்தில் 9-ஆம் இடம் பலமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

நவவித சம்பந்தம்

ஜீவாத்மாக்களாகிய நமக்கும், பரமாத்மாவுக்கு உள்ள உறவுகள் ஒன்பது வகைப்படும். அவன் படைத்தவன். நாம் அவனால் படைக்கப்பட்டவர்கள். அதனால், நாம் அவருக்கு உரியவர்கள் என்பதால் பரம்பொருளுக்கும் நமக்கும் இயல்பான தொடர்பு உண்டு. உறவு உண்டு. அந்த உறவு நவவித சம்பந்தம் என்பார்கள். இதற்கு ஒரு சுலோகம் இருக்கிறது.

“பிதா ச ரக்ஷகஸ் ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி:
ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாபி மனூதித:”

இந்த ஒன்பது உறவு முறைகளும் ஆத்மாவுக்கு எம்பெருமானோடு ஒரு காரணமின்றி, இயல்பாக ஏற்பட்டவை. உலகிலுள்ள உறவு முறைகள் யாவும் ஒரு கர்மம் காரணமாக, பிறப்பினால் (தாய் தந்தை இப்படி) அல்லது அது போன்ற உலகியல் காரணங்களால் (நண்பன்) வருவன. அக்காரணங்கள் முடிந்ததும் உறவும் முடிகின்றது. ஆனால், எம்பெருமானோடுள்ள உறவோ, “ஒழிக்க ஒழியாது” என்றபடி அவனாலும் ஒழிக்க ஒண்ணாது, நம்மாலும் இயலாது, இருவராலும் ஒழிக்க இயலாது.

1 – பிதா புத்திர (தந்தை-மகன்)
இதை கவியரசு கண்ணதாசன்,
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
– என்று எளிமையாக பாடியிருப்பார்.

2 – அவன் காப்பாற்றுபவன். நாம் காப்பாற்றப்படுவர்கள்.

3 – சேஷ சேஷி (தலைவன் – தொண்டன்) சம்பந்தம் சொல்லி,

4 – பர்த்ரு பார்யா (கணவன் – மனைவி) சம்பந்தம் சொல்லி,

5 – ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி,

6 – ஸ்வஸ்வாமி சம்பந்தம் சொல்லி,

7 – சரீர சரீரி (உடல் – உடலை உடையவன்) சம்பந்தம் சொல்லி,

8 – ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி,

9 – போக்த்ரு போக்ய (அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படும் பொருள்)நவவித பக்தி

இறைவன் மீது செலுத்தும் பக்தியை 9 விதமாகச் சொல்வார்கள்.

1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது “சிரவணம்”;

2. இறைவனின் பெருமைகளை வாயால் இடைவிடாமல் பாடுவது “கீர்த்தனம்”;

3. இறை நாமத்தை மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;

4. குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு நிறைய சேவை செய்வதே “பாத சேவை’’;

5. மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை’’;

6. எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;

7. “என் கடன் பணி செய்துகிடப்பதே’’ தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி, நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;

8. பகவானை நண்பனாக எண்ணிக் கொண்டு இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”; (அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட பக்தி).

9. தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்ம நிவேதனம்”;

நவராத்திரி

விரைவில் நவராத்திரி விழா வரப்போகின்றது. ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக் கான பெருவிழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாளும், இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அது `மகாநவமி’ என்று வழங்கப்படுகிறது.

ஸ்ரீராம நவமி

திதிகளிலே நவமி திதி ஒன்பதாவது திதியாகும். இந்த திதியில்தான் மகா விஷ்ணு அயோத்தியில் தசரதனுக்கு பிள்ளையாகப் பிறந்தார். ஸ்ரீராமன் பிறந்த திதி என்பதால், அவருடைய அவதார நாள் ஸ்ரீராம நவமித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ராமானுஜர் எழுதிய 9 நூல்கள்

வடமொழியில் ராமானுஜர் இயற்றிய நூல்கள்.

1. ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.

2. வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச் சொல்கிறது.

3. வேதாந்த சாரம்.

4. வேதாந்த தீபம்: இவை பிரம்ம சூத்திரத்தைப் பற்றிய சுருக்கமான உரைகள்.

5. கீதா பாஷ்யம்: இது கீதைக்கு விசிஷ்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.

6. நித்யக்கிரந்தங்கள்: அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும்.

7. சரணாகதி கத்யம்: பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.

8. ஸ்ரீரங்க கத்யம்: ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.

9. வைகுண்ட கத்யம்: பகவானின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

நவக்கிரக சந்நதிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் மனிதனின் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 9 கிரகங்களுக்கும் சேர்த்து நவக்கிரக சந்நதிகள் என்று பல சைவ திருக்கோயில்களிலே வைக்கப்பட்டு இருக்கின்றன. நவகிரக தலங்களும் உண்டு.

1. சூரியனார் கோயில் – சூரியன் – சூரியனார் கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)

2. திங்களூர் கைலாசநாதர் கோயில் – சந்திரன் – திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

3. வைத்தீஸ்வரன் கோயில் – செவ்வாய் வைத்தீஸ்வரன் கோயில் (மயிலாடுதுறை மாவட்டம்)

4. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் – புதன் – திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்)

5. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு – ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்)

6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் – சுக்கிரன் – கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் – சனி – திருநள்ளாறு (காரைக்கால்) (புதுச்சேரி)

8. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் – ராகு – திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்)

9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் கேது – கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்).

கும்பகோணம் அல்லது சீர்காழியிலிருந்து இத்தலங்களை எளிதாக தரிசிக்க முடியும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவக்கைலாயக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோயில்கள் நவதிருப்பதி எனும் பெயரில் அழைக்கப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நவக்கிரகக்கோயில் நவபாஷாணம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது.

நவரத்தினம்

ரத்தினங்கள் ஒன்பது வகை நவரத்தினம் என்று சொல்வார்கள். (முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்) செல்வத்தில் ஒன்பது வகையான செல்வங்களை நவநிதியங்கள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும். குபேரசம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்.

நவ துர்க்கை

துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களை நவதுர்கை என்ற பதத்தால் குறிப்பிடுவார்கள்.

“பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்
திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா
சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி
ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராற்றிச்ச
அஷ்டமம் கௌரிநிம் நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்”

– என்று ஒரு சுலோகம் உண்டு.

சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம். நவசக்தி துர்க்கையைப் போல, நவசக்தி விநாயகரும் உண்டு.

நவரசங்கள்

நாட்டிய சாஸ்திரத்தில் ஒருவர் வெளிப்படுத்தும் பாவங்களை ஒன்பது வாய்களாக பிரித்து நவரசங்கள் என்பார்கள். நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பான் சுவைகளை நவரசங்கள் என்கிறோம். இதை இப்படியும் சொல்லலாம். அபிநயத்தில் குறிப்பிடப்படும்.

பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவைகள்;

1. ஸ்ருங்காரம் (வெட்கம்)
2. வீரம்
3. கருணை
4. அற்புதம்
5. ஹாஸ்யம்(சிரிப்பு)
6. பயானகம் (பயம்)
7. பீபல்சம் (அருவருப்பு)
8. ரெளத்ரம் (கோபம்)
9. சாந்தம் (அமைதி)

அபிநயம் என்ற கலைக்கு அதிபதியான சரஸ்வதி தேவியே விளங்குவதால். அவளே அபிநய சரஸ்வதி, அபிநயதேவி, அபிராமிதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

நவசக்திகள், நவவீரர்கள், நவகுண்டம் என்று ஒன்று உண்டு. ஒன்பது வகையான சக்திகள், நவசக்திகள்;

1. வாமை, 2. ஜேஷ்டை, 3. ரவுத்ரி, 4. காளி, 5. கலவிகரணி, 6. பலவிகரணி, 7. பலப்பிரமதனி, 8. சர்வபூததமனி, 9. மனோன்மணி,

புராணங்களிலே நவவீரர்கள் குறித்த குறிப்பு உண்டு.

1. வீரவாகுதேவர், 2. வீரகேசரி, 3. வீரமகேந்திரன், 4. வீரமகேசன், 5. வீரபுரந்திரன், 6. வீரராக்ஷசன், 7. வீரமார்த்தாண்டன், 8. வீரராந்தகன், 9. வீரதீரன்
நவதானியம், நவநதிகள்,தானியங்களிலே ஒன்பது வகையான தானியங்களைக் குறிப்பிடுவார்கள். நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை என 9 தானியங்களுக்கு நவதானியம் என்று பெயர்.

நதிகளிலே ஒன்பது வகையான நதிகளை புனிதமான நதிகளாகச் சொல்லும் (நவ தீர்த்தங்கள்) வழக்கம் உண்டு. அவை: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி இன்னும் சில:

1. நவ அபிஷேகங்கள்:

மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

2. நவ திரவியங்கள்:

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்.

3. நவலோகங்கள்:

பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்.

4. சிவவிரதங்கள்:

சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேஸ்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்.

5. நவசந்திதாளங்கள்:

அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்.

6. நவ குண்டங்கள்:

(யாக குண்ட அமைப்புக்கள்) சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

7. நவ பிரம்மாக்கள்:

குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்.

8. நவபாஷாணம்:

வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்.

9. நவ சக்கரங்கள்:

த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.

10. பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!

11. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.

12. உடலின் நவ துவாரங்கள்:

இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்.

13. உடலின் ஒன்பது சக்கரங்கள்:

தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்.

The post நவமான எண் 9 தரும் நன்மைகள் appeared first on Dinakaran.

Related Stories: