தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் பெட்ரோல் தட்டுப்பாடு: சுற்றுலா பயணிகள் அவதி

திண்டுக்கல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் கடந்த 3 மணி நேரத்துக்கு மேலாக பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் கடந்த 3 நாட்களாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3 பெட்ரோல் பங்க்குகள் உள்ள நிலையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் டீசல் மட்டுமே உள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். செண்பகனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் மட்டுமே உள்ளதால் அங்கு மக்கள் குவிந்துள்ளனர்.

கொடைக்கானல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமபட்டு வருகின்றனர். கொடைக்கானலுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 02 வரை என 5 நாட்கள் தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு குவிந்தனர். இவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பினர். சுற்றுலா பயணிகள் வருகை, உள்ளூர் மக்களின் தேவை காரணமாக இங்குள்ள 3 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதலே ஏற்பட்ட தட்டுப்பாடால், சுற்றுலா பயணிகள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கொடைக்கானலிலேயே தங்கினர். பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்ற அறிவிப்பு சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்தது. கோவையில் இருந்து பெட்ரோல், டீசல் வந்தால் மட்டுமே நிலைமை சரியாகும் என்ற நிலை ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் லாரிகள் பழனி சாலையில் மட்டுமே வருகிறது. கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு பெட்ரோல், டீசலுடன் வந்த லாரிகள் மலைச்சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டன

 

The post தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் பெட்ரோல் தட்டுப்பாடு: சுற்றுலா பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: