ராகு – கேது என்றால் என்ன?

‘‘பையனுக்கு காளசர்ப்ப தோஷம் இருக்கு. அதனால இன்னொரு தோஷ ஜாதகமா பார்த்துதான் சேர்க்கணும்’’ என்று ஜோதிடர் சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் பதறுவார்கள். ‘‘ஒன்னும் பயப்படாதீங்க பரிகாரம் பண்ணா போதும்’’ என்று சொன்ன பிறகுதான் கொஞ்சம் பயம் தெளிவார்கள். அதற்குப்பிறகுதான் ராகு கேது பெயர்களின் பரிச்சயமாகும். ‘‘ஸார்… அதெல்லாம் பாம்போட பேராச்சே. நமக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்’’ என்று மெல்ல கேட்பார்கள்.

ராகு கேது என்றால் என்ன? அந்த கிரகங்கள் நம் வாழ்வில் அதன் ஆளுமை என்ன என்பதை முதலில் புரிந்து தெளிவோம். மனிதனின் subconscious எனும் நனவிலி மனம்தான் ராகு. அதனால்தான் ஜோதிடத்தில் கனவுகளைப் பற்றி சொல்பவராகவும் ராகு இருக்கிறார். Wisdom என்று சொல்லப்படும் ஆறாவது அறிவுதான் கேது. இன்னும் சொன்னால் நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துவதுதான் கேது. உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளை குறித்த அறிவை அளிப்பவர்தான் கேது.

எல்லோருக்கும் சிந்தனை உண்டு. அந்த சிந்தனைகளை ராகுவும், கேதுவும் தூண்டுகோலாகவும் (stimulate), துலங்குபவர்களாகவும் செய்கிறார்கள். நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக் கென்று உரிய நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆனால், ராகுவிற்கும் கேதுவும் தனிப்பட்ட பாதைகள் எதுவும் இல்லை. பன்னிரெண்டு ராசிக் கட்டங்களில் அதற்கென்று தனிப்பட்ட வீடுகளும் இல்லை.

ராகுவும் கேதுவும் உண்மையிலேயே கிரகங்கள் அல்ல. அதுவொரு நீண்ட நிழல். அந்த நிழலே கிரகங்களுக்குரிய சக்தியை பெற்றிருக்கிறது. அதனாலேயே அதை என்று அழைத்தார்கள். அந்த நிழல்போன்ற வடிவம் எப்படி உருவானது? ஒரு ரயில் அதிவேகமாகப் போகிறது. அப்போது அந்த ரயிலுக்கு அருகேயே அதன் வேகத்திற்கு ஈடாக ஒரு சக்தி உருவாவதை கவனித்திருக்கிறீர்களா. சிலசமயம் ரயிலுக்கு அருகே நிற்கும்போதே காந்தம்போல அந்த சக்தி இழுத்துப் போடும். காரணம் அந்த ரயிலின் வேகமான இயக்கம். அப்போது அந்த சக்திக்கு அருகேயுள்ள பல பொருட்கள் அலைகழிக்கப்படுகிறது.

அருகில் ஜீவராசிகளோ ஏன் மனிதர்கள் இருந்தால்கூட தூக்கி எறியப்படுகிறார்கள். அதுபோலத்தான் கிரகங்களின் சுழற்சியின்போது அதனையொட்டி, மின் காந்த அலைகள் போன்ற சக்திகள் உருவாகும். அந்த சக்திக்குத்தான் ராகு என்றும், கேது என்றும் பெயர். இந்த சுற்றும் கிரகங்களுக்கு இணையான மிகப்பெரிய படலமாக அது காணப்படுகிறது. காற்றில் தரைக்காற்று, மேல் காற்று என்று இருப்பதுபோல அந்தப் படலத்தின் மேல் படலத்தையே கேது என்றும், கீழ் படலத்தையே ராகு என்று அழைக்கிறோம். பேருந்து ஒன்று வேகமாக கடந்து விட்ட பிறகும் அவ்விடத்தில் ஏற்படும் புழுதிபுயல் தான் ராகுவும் கேதுவும்.

இன்னும் கொஞ்சம் யோசித்தால் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் ராகு. ஆசையே படாதே என்று அழுத்துவதுதான் கேது. இரண்டும் பாம்புதான். ஆனால் ஒன்றிற்கு எதிராகத்தான் இன்னொன்று நகரும். ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்றொரு பாடல் உண்டு. அந்த ஒளிந்து கிடக்கும் எண்பதும்தான் ராகுவாகவும், கேதுவாகவும் வெளிப்படுகிறது. மனம் என்றால் ஆசைப்படுவது என்பது அதன் இயல்பு.

அதில் சில சிக்கலான ஆசைகள் தோன்றுவதும் கூட மனதின் இயல்புதான். ஆனால், யோசித்த அல்லது பார்த்த விஷயங்களை தவறான முறையில் அனுபவிக்கத் தொடங்கும்போதுதான் உள்ளிருக்கும் ராகுவும், கேதுவும் தோஷமாக மாறுகிறது. தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால் ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னை காட்டிக் கொள்கிறது. அப்போது அங்கு சர்ப்பம் தன் நஞ்சை உமிழத்தான் செய்யும். அதைத்தான் ஜோதிடர் ஜாதகத்துல தோஷம் இருக்கு என்கிறார். அந்த நஞ்சை பரிகாரங்களால் வீர்யமிழக்க வழியும் சொல்கிறார்.

The post ராகு – கேது என்றால் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: