சகோதரியுடனான காதலை எதிர்த்த மாணவனை குத்தி கொலை செய்த இளைஞர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த வீரமணியின் மகன் ஜீவா. இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த், இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே வாய்த்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஜீவா பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்போது சுமார் 8 மணியளவில் அங்கு வந்த ஆனந்த், ஜீவாவை உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையடுத்து அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜீவாவை கண்டா இடத்தில் குத்தியுள்ளார். இதில் 8 இடங்களில் பலத்த காயதமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் மாணவனின் சகோதரியை ஆனந்த் காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கும் மாணவன் எதிர்த்து தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2 நாட்களாக சகோதரியின் செல்போனை மாணவன் எடுத்து வைத்துக்கொண்டதாகவும் இதனால் ஆனந்த், மாணவனின் சகோதரியிடம் பேச முடியாமல் போனதால் ஆத்திரமடைந்த ஆனந்த், மாணவனிடம் பேச வேண்டும் என அழைத்து சென்று கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்த 6 மாதத்திற்கு முன்பாக மாணவனை, ஆனந்த் தவறான உறவிற்கு அழைத்ததாகவும் இதனால் எரிச்சலடைந்த மாணவன் ஆனந்தின் குடுபத்தினரிடம் தகவல் தெரிவித்ததற்கும் மாணவன் மீது ஆனந்திற்கு கோபம் ஏற்பட்டதாகவும் கொலைக்கான காரணமாக இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

The post சகோதரியுடனான காதலை எதிர்த்த மாணவனை குத்தி கொலை செய்த இளைஞர் appeared first on Dinakaran.

Related Stories: