சாலையோரங்களில் கொட்டப்படும் காலாவதியான மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி


பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிராம பகுதியில் உள்ள சாலையோரங்களில் கொட்டப்படும் காலாவதியான மருத்துவக்கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றப்பட்டு, பொள்ளாச்சி நோக்கி வந்த வாகனங்களை பொதுமக்கள் பலமுறை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், கேரளாவில் இருந்து ரசாயன கழிவு, மருத்துவக்கழிவு, கோழிக்கழிவு, மீன்கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை பொதுமக்கள் அடுத்தடுத்து சிறைபிடித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் வழியாக செல்லும் சாலையோரங்களில் ஆங்காங்கே கோழிக்கழிவு உள்ளிட்ட கழிவு, ரப்பர் கழிவு உள்ளிட்ட பொருட்கள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாலக்காடு சாலையிலிருந்து நாட்டுக்கல் பாளையம் செல்லும் வழி மற்றும் கிழக்கு புறவழிச்சாலையில் உள்ள சாலையோரங்களில் அன்மை காலமாக காலாவதியான மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது அதிகமாக உள்ளது.  அதில் மருந்து பாட்டில், ஊசி உள்ளிட்டவை குவியலாக போடப்பட்டுள்ளது. இந்த மருத்துவக்கழிவுகள் சுற்று வட்டார பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகிறதா? அல்லது கேரள பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

இப்படி திறந்த வெளியில் மருத்துவக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு விளைவிப்பதுடன், நோய் பரவும் அபாயம் நேரிடும் என்று பொதுமக்கள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளனர். எனவே, சுற்று வட்டார கிராமங்களில் சாலையோரம் கோழிக்கழிவு, மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரங்களில் கொட்டப்படும் காலாவதியான மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: