தொடர் விடுமுறைகளால் நகரமே ஸ்தம்பித்தது; நெரிசலில் திண்டாடுது கொடைக்கானல்: ஒன்றரை மணிநேரம் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதால், பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது. தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போதைய தொடர் விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இன்னும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, அப்பர் லேக் வியூ, கோக்கர்ஸ் வாக், நகரின் மைய பகுதியிலுள்ள ஏரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

அனைத்து சுற்றுலா இடங்களிலும், பிரதான சாலைகளிலும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் அரை மணிநேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ் ஆனந்தகிரி மற்றும் மூஞ்சிக்கல் பகுதி வழியாக சுமார் ஒன்றரை மணிநேரம் டிராபிக்கில் சிக்கி தவித்து மருத்துவமனையை சென்றடைந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் ஹவுஸ்புல்லாகி உள்ளன.

உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து, சுற்றுலாப் பயணிகளை குளிர்வித்து வருகிறது. இதமான சூழல் அவ்வப்போது நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ரசித்து செல்கின்றனர்.

The post தொடர் விடுமுறைகளால் நகரமே ஸ்தம்பித்தது; நெரிசலில் திண்டாடுது கொடைக்கானல்: ஒன்றரை மணிநேரம் டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: