
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் மழை பெய்யாததால் கோயில் தீர்த்தங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இந்த ஆண்டு துவக்கம் முதல் போதுமான அளவுக்கு மழைப்பொழிவு இல்லை. கோடையில் தமிழகத்தின் மற்ற இடங்களில் மழை பெய்தபோதிலும், ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன் தீர்த்தக்குளங்களில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீராடும் தீர்த்தக் கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. குறிப்பாக கோயில் பிரகாரங்களில் அமைந்துள்ள இரண்டாவது தீர்த்தம், 14, 15, 20 மற்றும் 21 ஆகிய தீர்த்த கிணறுகள் தண்ணீர் வற்றிப்போய் காணப்படுகிறது.
இதனால் புனித நீராடும் பக்தர்கள் தொடர்ந்து தீர்த்தமாட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் வீட்டு கிணறுகளிலும் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் வரும் நாட்களில் போதுமான அளவிற்கு மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால் ராமேஸ்வரம் கோயிலுக்கு நாள்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடுவதும் கேள்விக்குறியாகி விடும். ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் மழைக்காக இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.
The post மழையின்றி வறண்டு வரும் ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறுகள்: பக்தர்கள் தீர்த்தமாடுவதில் சிக்கல்? appeared first on Dinakaran.