சாலையில் பிரேக் டவுனாகி நின்ற லாரியில் 1 டன் குட்கா பறிமுதல்: டிரைவர் கைது; பெரம்பூரில் பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் சாலையில் பிரேக் டவுனாகி நின்ற லாரியில் இருந்து ஒரு டன் குட்கா பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் நேற்றிரவு 11 மணி அளவில் உ.பி.யில் இருந்து வந்த லாரி பிரேக் டவுன் ஆகி நடுரோட்டில் நீண்டநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்பியம் போக்குவரத்து போலீசார் சென்று அந்த லாரியை சாலையோரமாக நிறுத்த உதவி செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், நேற்றிரவு ரோந்து பணியில் இருந்த செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் சென்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரைவரிடம் விசாரித்தபோது லாரியில்என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை என்று கூறியதுடன் பதற்றத்துடன் பேசினார். இதையடுத்து செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு வந்து லாரியின் பின்பக்க கதவின் பூட்டைஉடைத்து சோதனை செய்தபோது பண்டல், பண்டலாக குட்கா பொருட்கள் இருந்தது.

புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் சம்பவ இடம் வந்து லாரியை சோதனை செய்தபோது 30 பண்டல்களில் சுமார் ஒரு டன் குட்கா பொருட்கள் இருந்தது.இதையடுத்து லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலம் சிரியாபூர் பகுதியை சேர்ந்த ரிங்கு (23) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர், டெல்லி மகாராஷ்டிரா டிரான்ஸ்போர்ட் அண்ட் கோ என்ற நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருவதாகவும் லாரி உரிமையாளர் கௌலத் ராம் என்பவர் உத்தரவின்படி, உத்தர பிரதேசம் மாநிலம் காசிபாத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு அதன் பிறகு நொய்டா பகுதிக்கு சென்று 147 வகையான சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள கழிப்பட்டூர் பகுதிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். லாரி டிரைவர் ரிங்கு உத்தரபிரதேசத்தில் இருந்து மாதவரம் பகுதிக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து ரிங்குவை கைது செய்தனர்.

The post சாலையில் பிரேக் டவுனாகி நின்ற லாரியில் 1 டன் குட்கா பறிமுதல்: டிரைவர் கைது; பெரம்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: