இந்த வார விசேஷங்கள்

மஹாளயம் ஆரம்பம்
30.9.2023 – சனி

இன்று சனிக்கிழமை. இன்றிலிருந்து 15 நாட்கள் மகாளயபட்சம். இன்று முதல் 15 நாட்கள் முன்னோர்களுக்கான வழிபாடு நடத்த வேண்டும். 15 நாட்களும் நடத்த முடியாதவர்கள் மகாளயபட்சத்தில் ஏதாவது ஒரு நாளும், மகாளய அமாவாசை அன்றும் கட்டாயம் இந்த வழிபாடு நடத்துவது குடும்பத்துக்கு நல்லது. இந்த மகாளய பட்சத்தில் பித்ருக்கள் என்று சொல்லப்படும் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் வந்து இருக்கின்றார்கள். அதனால், நாம் தூய்மையாக இருக்க வேண்டும்.

மகாளயபட்ச காலத்தில், அவரவர் வசதிக்குத் தக்கபடி பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் என மூன்று வகையான தர்ப்பணங்களை சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்திருக்கின்றன. அதாவது, 6 பேர்களை, பித்ருக்களாக பாவித்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலானவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக ஹோமம் செய்து, உணவளித்து, தட்சணை வழங்கி, நமஸ்கரித்துச் செய்வது.

ஹிரண்யம் என்பது, பொதுவாகவே அனைவரும் செய்யும் தர்ப்பணம். அரிசி, வாழைக்காய் முதலானவற்றுடன் தட்சணை வழங்கி தர்ப்பணம் செய்வது. அல்லது அமாவாசை நாளில் எள்ளும் நீரும் இறைத்துச் செய்வது. மகாளய தர்ப்பணம் செய்பவர்கள், மகாபரணியிலும் மத்யாஷ்டமியிலும் மஹாவ்யதீபாதத்திலும் கஜச்சாயாவிலும் மறக்காமல் தர்ப்பணம் செய்து, தானங்கள் செய்வது மிகவும் உத்தமம். இப்படி இருப்பதால் அவர்களுடைய அருள் ஆசி கிடைக்கும். சுபகாரிய தடைகள் விலகும். செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

அப்பய்ய தீக்ஷிதர்
30.09.2023 – சனி

600 வருடங்களுக்கு முன் ஒரு மகான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். (1520-1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவபக்தர். அப்பா அம்மா வைத்த பெயர் விநாயக சுப்ரமணியன். ஊர் ஆரணி அருகே திருவண்ணாமலை ஜில்லாவில் உள்ள அடையபலம். அப்பா பெயர் ரங்கராஜுத்வாரி. ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாம் கற்பித்தார். தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர். ‘‘என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா?” தானே இதை அறிந்து கொள்ள ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். சீடர்களை அழைத்தார். ‘‘என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்க போகிறேன்.

தன் நிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப்போது என் உடலிலே, உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். பிறகு மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்” ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பய்ய தீட்சிதா் சிவனின் புகழைப் பாடிக் கொண்டேகுதித்தார். சிவனின் புகழைப் பாடிக் கொண்டே ஆடினார், பாடினார், உருண்டார், அழுதார். பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார். ‘‘என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?” என்று சீடர்களிடம் கேட்டார்.

‘‘நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்” என்று அவர்கள் சொல்ல, மகிழ்ந்தார். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது ‘‘ஆத்மார்ப்பண ஸ்துதி’’. அவருடைய இன்னொரு ஸ்தோத்ரம் “சிவார்க்க மணி தீபிகை” தீக்ஷிதரின் சிவ பக்தி சேவையை கௌரவித்து வேலூரை ஆண்ட ராஜா சின்ன பொம்ம நாயக்கன் தனது அரச சபையில் அவருக்கு தங்க புஷ்பங்களினால் கனகாபிஷேகம் செய்தான். தீக்ஷிதரின் பிரம்ம சூத்ர கண்ட பாஷ்யம் ஆதி சங்கரரின் பாஷ்யத்தை, அடி ஒற்றி இருக்கிறது. சகுணோபாசனை மூலம் நிர்குண உபாசனை பெறுவது சுலபம் என்று விளக்கினார். தீக்ஷிதரின் ஆனந்தலஹரி சந்திரிகா ஒரு அற்புத படைப்பு.

உருத்திராபதி நாயனார்
1.10.2023 – ஞாயிறு

உருத்திர பசுபதி நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். காவிரி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத் தலையூரிலே அந்தணர் குலத்திலே அவதரித்தார் பசுபதியார். சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீஉருத்திர மந்திரத்தை நொடி நேரமும் வீணாக்காது ஓதி வந்தார்.

இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகை களையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் வழக்கத்தில் இருந்தார். இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவர் இந்நாயனாருக்கு சிவலோக வாழ்வினை நல்கியருளினார். அவர் குருபூஜை இன்று (புரட்டாசி அஸ்வினி).

மஹாபரணி
2.10.2023 – திங்கள்

பித்ரு வழிபாடுகளைச் செய்ய ஏற்ற காலம் மகாளயபட்ச காலம் என்கிறார்கள். இதில் மகாபரணி நாள் முக்கியம். பரணி நட்சத்திரம் என்பதை வேதம், அபபரணி என்று போற்றுகிறது. பரணி நட்சத்திரத்தின் அதிதேவனாக யமன் இருப்பதால், பித்ருக்களின் காவலனான யமனை ஆராதிக்கும் நாளாகவும் மகா பரணி நாள் அமைகிறது. இந்த நாளில் நீங்கள் எங்கிருந்து தர்ப்பணம் செய்தாலும் அது கயாவில் தர்ப்பணம் செய்த புண்ணியத்தை அளிக்கும்.

இந்த நாளில் நம் முன்னோருக்கு நாம் செய்யும் தர்ப்பணமும் படையலும் தான தர்மங்களும் அவர்களை மகிழ்வித்து நம்குலத்துக்கே நன்மையை அளிக்கும். இந்த நாளில் வழிபாடுகளோடு தானம் அளிப்பதும் சிறப்பானது. வஸ்திர தானம், செருப்பு, குடை தானம் போன்றவை செய்யலாம்.

திருநாளைப்போவார்
4.10.2023 – புதன்

திருநாளைப் போவார் நாயனார் இறையருளால் நந்தி விலக இறை தரிசனம் பெற்றவர். அப்படி அவர் தரிசனம் பெற்ற தலம் திருப்புன்கூர். வைதீஸ்வரன் கோயில் அருகே உள்ளது. திருநாளைப் போவார் நாயனாரின் இயற்பெயர் நந்தனார் என்பதாகும். இவர் ஆதனூர் என்னும் ஊரில் பிறந்தார். ஆதனூர் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ளது. நீர் வளமும், நிலவளமும் மிக்கதாய் வயல்கள் நிறைந்த அவ்வூரில் உழவுத் தொழில் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களில் நந்தனார் என்பவரும் ஒருவர்.

சிவபெருமானின் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். அக்காலத்தில் திருக்குலத்தைச் சார்ந்தவர்கள் எவரும் கோயிலுக்கு செல்ல இயலாது. சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருந்த நந்தனாரால் கோயிலுக்கு நேரே சென்று சிவபெருமானை தரிசிக்க இயலவில்லை. ஆனாலும், நந்தனார் கோயில்களில் இசைத் தொண்டு புரிபவர்களுடைய யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளுக்கு வேண்டிய நரம்பினை வழங்குவார்.

கோயில்களில் ஆராதனைக்கு தேவையான கோரோசனையைக் கொடுப்பார். சிவாலயங்களில் ஒலிக்கப்படும் பேரிகை, முரசு ஆகியவற்றின் இசையையும், யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளின் நாதங்களையும் கேட்டதும், நந்தனார் மகிழ்ந்து இன்புறுவார்; குதிப்பார்; பாடுவார்; கூத்தாடுவார்; கொண்டாடுவார். ஒருசமயம் நந்தனார் மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரை தரிசிக்க எண்ணி திருப்புன்கூரை அடைந்தார். அக்கோயிலின் உள்ளே செல்ல அக்கால கட்டுப்பாடுகள் தடுத்ததால் வெளியே நின்று கொண்டு சிவலோகநாதரை தரிசிக்க முயன்றார்.

சிவலோகநாதரின் முன்னால் இருந்த நந்தி நந்தனாருக்கு மறைத்தது. மனம் நொந்த நந்தனார், இறை தரிசனம் கிடைக்க அருள்புரியுமாறு இறைவனை மனம் உருகி வேண்டினார். இறைவனார் தம் பக்தனின் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்தியம்பெருமானுக்கு ஆணையிட்டார்.
இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும், நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. அந்த இறையடியாரின் குரு பூஜை தினம் இன்று. (புரட்டாசி ரோகிணி)

கபில சஷ்டி
4.10.2023 – புதன்

திதிகளில் ஆறாவது திதி சஷ்டி திதி. அன்று பெரும்பாலும் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்குவது வழக்கம். ஆனால், புரட்டாசி மாதத்தில் தேய்பிறை சஷ்டி திதி அன்று குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் பூஜை செய்து, பசுமாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலமாக, நம்முடைய பாவங்கள் தொலைந்து, நமக்கு திருமகளின் பேரருள் கிடைக்கும். “கபிலை பசு வணக்க நாள்” என்று இந்த நாளைச் சொல்லலாம். கபிலை பசுவின் பெருமை குறித்து மஹாபாரதத்தில் வருகிறது.

இந்த கபிலா சஷ்டி நாளிலே, பசுவை அலங்காரம் செய்து வணங்க வேண்டும். அதன் மூலமாக, பற்பல நற்பலன்களும், பாங்கான நல்வாழ்வும் கிடைக்கும். இஷ்ட தெய்வத்தையும் குலதெய்வத்தையும் வழிபாடு செய்யலாம். பசுவுக்கு புல்லோ, கீரையோ, பழமோ, தீவனமோ அளிக்கலாம்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் “பசுவுக்கு ஒரு வாயுறை;”
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு
கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை
தானே. (திருமந். 252)

– என்று திருமூலரும் இந்த உண்மையை உணர்த்துகிறார்.

பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர். எனவே, கபில சஷ்டி அன்று நீராடி இறைவனை வணங்கி பசுவுக்கு ஏதேனும் உணவு வழங்கி வழிபடுங்கள்.

வள்ளலார் அவதார தினம்
5.10.2023 – வியாழன்

‘‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!! தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!” எனக் கருணையும் ஜீவகாருண்யமுமே மனிதக் குலத்துக்கு மாண்பைத் தரும் சிறந்த வழிபாடு என உரைத்தவர் வள்ளலார். ஆயிரக்கணக்கானோர் பசியைப் போக்கிட அன்னதானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என்று போற்றப்பட்டார். வள்ளலார் அவதார நாளில் விளக்கு ஏற்றி அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ‘திருவருட்பா’ பாடுங்கள்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற
தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத்
தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த
தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந்
தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந்
தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டு
விக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா
தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே
தெய்வம்.
– என்ற அருட்பாவை பாடுங்கள்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: