தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைவடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பராம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நிதியுதவி வழங்குதல்
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு ரூ.10,000/- மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 50 இலட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
நலிந்த நிலையில் வாழும் 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000/- நிதியுதவி வழங்குதல்
நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 15,063 கலைஞர்கள் பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 2020-21 மற்றும் 2021-22-ஆம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட 1000 நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் ரூ.3,000/- வீதம் நிதயுதவி வழங்கிடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4 நலிவுற்ற மூத்த கலைஞர்களுக்கு மாதந்திர நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
The post 500 கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் வாங்க ரூ.50 லட்சம், 1000 மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.
