வடகிழக்கு பருவமழை காலத்தில் பசுமைக்குடில்கள் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி, செப்.29: வடகிழக்கு பருவமழை காலத்தில், பசுமைக்குடில்கள் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென கலெக்டர் சரயு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர் பாதுகாப்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பசுமைக்குடில் அடிபாகத்தை, பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் பக்கவாட்டு திரைகளை, உரிய முறையில் மூடி வெளிக்காற்று உள்பகுதியில் புகாதவாறு பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின், அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் ஏதேனும் கிழிந்த பிளாஸ்டிக் சீட்டுகள் இருப்பின், அவற்றை மாற்றி உரிய முறையில் பராமரிக்க வேண்டும். மேலும், கிழிந்துபோன நிழல் வலைகளை தைத்து, சரி செய்ய வேண்டும்.

தோட்டக்கலை பயிர்களில், அறுவடைக்கு தயாராக இருக்கும் பழத்தோட்டங்களில், அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கலாம். வடிகால் வசதி இல்லாத நிலங்களில், ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைக்கலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க, உபரிநீர் வடிந்த பின்பு நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து, செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

மா, கொய்யா, எலுமிச்சை மற்றும் பலா மரங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post வடகிழக்கு பருவமழை காலத்தில் பசுமைக்குடில்கள் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: