சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் பயணம்: துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை பார்வையிட்டார்

சென்னை: சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு, துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றார். அவருடன் துறை செயலாளர் பிரதீப் யாதவ், சிங்கப்பூர் இந்திய தூதரக ஆணைய முதன்மை செயலாளர் பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ‘சிங்கப்பூர் துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை’ கடந்த 27ம் தேதி பார்வையிட்டார்.

பன்னாட்டு துறைமுக சரக்கு பெட்டக முனையங்களில், சிங்கப்பூர் சரக்கு பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு பெட்டக முனையம், துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது. சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது ஆகும்.

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது என்பதை தெரிவித்தார். கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையோ அல்லது இதர சிறுதுறைமுகங்களில், ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாக, விரிவாக விவாதித்தார். மேலும், தமிழ்நாட்டின் கடற்கரையின் திறனை பயன்படுத்துவதை, நோக்கமாக கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

துறைமுகங்கள் மற்றும் கடல்சார் திட்டங்களுக்கு, முதலீடுகளை எளிதாக்குவதற்கு, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த, அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர்.

The post சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் பயணம்: துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: