திருப்பதிக்கு பாதயாத்திரை வருவோர் அதிகரிப்பு: ஏழுமலையானை 12 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதிக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமானுஜரின் சீடராக இருந்த அனந்தாழ்வார் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பூஜைகள் செய்வதை பார்த்து கொள்வதற்காக ராமானுஜரால் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமலைக்கு வந்தார். திருமலையில் தினமும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக ஒரு ஏரியும், நந்தவனமும் அமைத்தார். அனந்தாழ்வாரின் பக்தியை சோதிக்கும் விதமாக சீனிவாச பெருமாளும், பத்மாவதி தாயாரும் சிறுவன், சிறுமியாக தோட்டத்திற்கு சென்றனர்.

அங்கு பூக்கள் பறிக்க முயன்றதை பார்த்த அனந்தாழ்வார் இருவரையும் பிடிக்க முயன்றார். ஆனால், சிறுவன் மட்டும் தென்கிழக்கு மாடவீதி வழியாக கோயிலுக்குள் சென்று மறைந்தார். இதனால், சிறுமியை ஒரு செண்பக மரத்தில் அனந்தாழ்வார் கட்டி வைத்தார். இதையடுத்து, பத்மாவதி தாயாரை அழைத்து வருவதற்காக பின்புறமாக சென்ற பெருமாள், தனது விஸ்வரூபத்தை காண்பித்தார். இதனை கண்ட அனந்தாழ்வார் தன்னை சோதிக்க பெருமாளும், பத்மாவதி தாயாரும் வந்ததை அறியாமல் தாயாரை கட்டி வைத்ததை மன்னிக்கும்படி கூறி தாயாரை மலர் கூடையில் வைத்து கோயிலுக்கு அழைத்து வந்தார். இந்த திருவிளையாடல், பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் தோட்ட உற்சவமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அனந்தாழ்வார் நந்தவனத்தில் இந்த உற்சவம் நடைபெற்றது.

மலையப்ப சுவாமி அனந்தாழ்வார் தோட்டத்துக்கு ஊர்வலமாக சென்றார். அங்கு மலையப்ப சுவாமி மீது இருந்த மாலை மகிழ மரத்திற்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தாயாருடன் மலையப்ப சுவாமி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தார். பிரம்மோற்சவம் நிறைவுபெற்ற நிலையில் ஆந்திரா, தமிழகம் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் திருமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு 12 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கு பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.

The post திருப்பதிக்கு பாதயாத்திரை வருவோர் அதிகரிப்பு: ஏழுமலையானை 12 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: