காலநிலை மாற்றத்தால் அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்: நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவு

ரியோ டி ஜெனிரோ: காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் நீர்நிலைகளை பாதுகாக்க அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் ‘உலகத்தின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன.

இவற்றில் ஏராளமானவை மனிதர்களால் அறியப்படாதவை. பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான வினோத பறவைகள், பூச்சி வகைகள், விலங்குகள், 200 வகையான கொசுக்கள், ரத்தக்காட்டேரி வவ்வால்கள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என நாம் இதுவரை பார்த்திராத இந்த காடுகளில் உலா வருகின்றன. காடு முழுவதும் அடர்த்தியான மரங்கள் என்பதால், தரையின் பெரும்பாலான பகுதிகள் சூரிய வெளிச்சத்தை பார்த்ததே கிடையாது. கணக்கில் அடங்காத இயற்கை வளங்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன.

இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019ம் ஆண்டு முதல் காட்டுத்தீ பரவியது. கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. மேலும் அவ்வப்போது பெய்யும் மழையும் பொய்த்து போனது. அணைகள் உள்ளிட்ட நீர்தேக்க நிலையங்களின் கொள்ளளவு குறைந்து வருகிறது. எனவே வரும் காலங்களில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பூர்வ பழங்குடிகள் உள்பட 5 லட்சத்திற்கும் அதிகமான பிரேசில் மக்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவர் என அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் ரூ.166 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டு நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post காலநிலை மாற்றத்தால் அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்: நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: