200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் மாநில பதவி!

சென்னை: 200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் மாநில பதவி வழங்கப்பட்டுள்ளது. 8 கொலை வழக்குகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆர்.கே.சூர்யா நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே ரவுடி சூர்யாவுக்கு, பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில பதவி பெற்றுள்ள ரவுடி ஆர்.கே.சூர்யா, பாஜகவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேத சுப்ரமணியத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சென்னை புறநகர் பகுதியான நெடுங்குன்றத்தைச் சேர்ந்த ஆர்.கே.சூர்யா போலீசாரின் “ஏ பிளஸ்” ரவுடிகள் பட்டியலில் இருந்தவர்.

பிரதமர் மோடி, அண்ணாமலை செயல்பாடு காரணமாக பாஜகவில் இணைத்துள்ளதாக அவர் பேட்டியளித்துள்ளார். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தை சேந்தவர் சூர்யா. இவர் மீது பீர்க்கன்காரணை, ஓட்டேரி, தாழம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பேத்கார் கூட்டமைப்பு ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டார். இந்த நிலையில் பாஜக கட்சியில் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யாவுக்கு பா.ஜ.க கட்சியில் பட்டியலணி மாநில செயலாளர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்ரமணியத்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது பேசிய அவர்; “அம்பேத்கார் கூட்டமைப்பு தலைவவராக இருந்தேன். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செயல்பாடுகளால் பாஜகவில் இணைந்துள்ளேன், தன்னை மாநில பட்டியலணி தலைவர் தடா.பெரியசாமி மாநில செயலாளராக நியமனம் செய்துள்ளார். இதனால் சமுதாய பணியில் ஈடுபடவுள்ளேன். என் மீது தற்போது எந்த பிடியாணையும் இல்லை, ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக அறிந்தேன்.

அதில் சில வழக்குகள் சட்டப்பட்டி முடிந்துள்ளது. மீதமுள்ள வழக்குகளையும் முறையாக சட்டப்படி அணுகுவேன், அதேபோல் என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள், அவர்களை காவல் துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன். என் மனைவி ஏற்கனவே பாஜகவில் உள்ளார். அவருக்கு பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை நெருக்கடியால் நான் பாஜகவில் சேரவில்லை. அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்து, இப்போது பொறுப்பு பெற்றுள்ளேன். அண்ணாமலை சொன்னால், தேர்தலிலும் போட்டியிட தயார்” என்று கூறியுள்ளார்.

 

The post 200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் மாநில பதவி! appeared first on Dinakaran.

Related Stories: