அபூர்வ தகவல்: பெருமாள் கோயிலில் பிரதோஷம்

பெருமாள் நித்திய வாசத்தலம்

காஞ்சிபுரம் திருத்தலத்தில் வரதராஜப் பெருமாளாக ஸ்ரீமந் நாராயணன் புண்ணியகோடி விமானத்துடன் எழுந்தருளிய நன்னாள் சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும். அந்நாளில் தேவர்கள் ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று பெருமாளைக் கேட்டுக் கொள்ள, நாராயணன் சம்மதித்தார். ஐராவதம் என்ற யானை, மலை வடிவம் கொண்டு ஸ்ரீமந் நாராயணனைத் தாங்கி நின்றது. இதனால் இத்தலத்துக்கு ‘அத்திகிரி’ என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த நாளில் தேவாதி தேவர்களும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் நித்தியவாசம் செய்வதாகப் புராண வரலாறு கூறுகிறது.

16 அடி உயரப் பெருமாள்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழியில் 6 கி.மீ. தொலைவிலுள்ள ‘விளநகர்’ எனும் கிராமத்தில் இரண்டு தேவியருடன் வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். புரட்டாசி திருவோண நட்சத்திர தினத்தன்று இவரை வழிபட்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி ஏற்படும். இவர் முன் அமர்ந்து ‘ஓம் நமோ நாராணாய நமஹ’ என 108 முறை ஜபித்தால், வாழ்க்கை சிறக்கும். இப்பெருமாள் 16 அடி உயரம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை உயரக் கேட்பானேன்!

மூன்று கோலத்தில் பெருமாள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது மன்னார் கோயில். இங்கு பெருமாள் மூன்று நிலைகளில் காட்சித் தருவது சிறப்பு. இக்கோயில் கருவறையில் நின்ற கோலத்திலும் கருவறைக்கு மேலே அமையப் பெற்றுள்ள அஷ்டாங்க விமானத்தின் முதல் அடுக்கில் வீற்றிருந்த கோலத்திலும், அதற்கு மேல் இரண்டாம் அடுக்கில் சயனக்கோலத்திலும் காட்சி தருகிறார் பெருமாள்.

பெருமாள் கோயிலில் பிரதோஷம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள்குன்றம் என்ற இடத்தில் சிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இந்த நரசிம்ம மூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால் நந்தி தேவவுடன் சிவபெருமானை வழிபடும் பிரதோஷ தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

பெருமாள் வடிவில் பூமாலை

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் புறப்பாடாவார். ஆனால், மாலையில் வாசனை மிகுந்த ஒரு பூமாலையை மட்டும் மேளதாளத்துடன் புறப்படச் செய்கின்றனர். பெருமாளே மாலை வடிவில் பவனி வருவதாக ஐதீகம். ராமானுஜர் அவதரித்த தலம். இங்கு தீபாவளி துவங்கி தை மாத ஹஸ்த நட்சத்திரம் வரையில் ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகமே நடைபெறுகிறது.

கொடி மரத்தில் ஆமை

பொதுவாக பெருமாள் கோயில் கொடி மரங்களின் உச்சியில் கருடனை அமைப்பது வழக்கம். ஆனால், நாகர்கோவில் நாகராஜா கோயில் சந்நதியின் வலதுபுறமுள்ள அனந்தகிருஷ்ணன் சந்நதியில் உள்ள கொடி மரத்தில் கருடனுக்குப் பதில் ஆமை உள்ளது. பாம்புக்கு கருடன் பகை. இந்த கோயில் நாகத்திற்கான கோயில் என்பதால் கருடனுக்குப் பதில் ஆமை இருப்பதாக கூறப்படுகிறது.

லிங்க வடிவில் பெருமாள்

கோவையிலிருந்து சத்திய மங்கலம் போகும் பாதையில் பாசூர் பிரிவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள மொண்டிப்பாளையம் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலமூர்த்தி, லிங்கம் போன்ற அமைப்பு கொண்டவர். நாற்புறமும் பட்டையாகவும், நடுவில் கூம்பாகவும் காட்சியளிக்கிறார்.

முக்கோலப் பெருமாள்

பெருமாள் கோயில் என்றாலே அவரது அனந்த சயனத் திருக்கோலம்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் மலையடி கிராமத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த ஆகிய மூன்று கோலங்களிலும் அரிதாகக் காட்சி அளிக்கிறார். இக்கோயில் தஞ்சை பெரிய கோயிலைவிட காலத்தால் முற்பட்டது என்கிறார்கள்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post அபூர்வ தகவல்: பெருமாள் கோயிலில் பிரதோஷம் appeared first on Dinakaran.

Related Stories: