திருவெறும்பூர்,செப்.28: திருச்சி மாவட்டத்தில் டெங்கு பரவல் இல்லை. 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினமான நேற்று திருச்சி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களை கல்லூரி மாணவர்கள் கொண்டு தூய்மை படுத்தும் பணிநடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோயிலில் துவாக்குடியில் உள்ள மாநில உணவக மேலாண்மை தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களை கொண்டு தூய்மை பணி நடைபெற்றது. இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. இந்த கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு பரவல் இல்லை. இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்கள் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ சேவை மையம் மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லையென்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு பரவல் இல்லை. இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
The post கண்காணிப்பு நடவடிக்கை தொடர்கிறது என கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.