இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உச்சநீதிமன்ற உத்திரவின்படி கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்குரிய நீர் திறந்து விடப்பட்டுள்ளதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் சில அமைப்புகள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் தாக்கப்பட்ட படங்களை தற்போது நடைபெறுவதாக மதுரை மாவட்டம், கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சீமான் என்பவரும், நெல்லையை சேர்ந்த நெல்லை செல்வின் என்பவரும் தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் கர்நாடகாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக தவறாக முகநூலில் பதிவிட்டும் அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டும் மாற்று மாநிலத்தவரை அச்சம் கொள்ள செய்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டுள்ளனர். எனவே, மதுரை மாவட்ட காவல் துறை தாமாக முன்வந்து கருப்பாயூரணியை சேர்ந்த சீமான் என்பவர் மீது மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 153, 153A, 504, 505 (1) (b), 505 ஐபிசி- 67/17 ஆகிய பிரிவுகளில் பதிவு செய்துள்ளது.
அதேபோல் நெல்லையை சேர்ந்த செல்வின் என்பவர் மீது திருநெல்வேலி டவுன், மாதா பூங்கொடி தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் பிரிவு 153, 153A, 505(1) ஐபிசி படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களை விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இது போன்று பதற்றத்தை விளைவிக்கும் வகையில் பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் பழைய வீடியோவை மீண்டும் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை; 2 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.