ஆதி திராவிடர் விடுதியில் சேருவதற்கு ஊட்டி அரசு கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்

ஊட்டி: ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவர்களிடம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர ரூ.10 ஆயிரம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பணம் உள்ள பிரவுன் கவரை வழங்குகிறார். அப்போது, மாணவரை பார்த்து, ‘‘சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போதுதான் இடம் கிடைக்கும்’’ என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட கல்வி இயக்கக துணை இயக்குநர் கலைச்செல்வி கூறுகையில், ‘‘ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சில பேராசிரியர்கள் ஏற்கனவே பணம் பெற்றதாக வெளியான தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டோம். இது தொடர்பான அறிக்கை விரைவில் உயர் கல்வி இயக்குநர் மற்றும் கல்வித்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும். தற்போது ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்காக கல்லூரி முதல்வர் பணம் கேட்பதுபோல வீடியோ ஒன்று வெளியானதாக கூறப்படுவது குறித்து எனக்கு தெரியவில்லை. எனினும், இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என தெரிவித்தார்.

The post ஆதி திராவிடர் விடுதியில் சேருவதற்கு ஊட்டி அரசு கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: