சிவனை தரிசித்த வாமனர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருமாலவனின் தசாவதாரங்களுள் ஐந்தாவதாக அமையப் பெற்றது வாமன அவதாரமாகும். மாயவனாகிய மாயோன், முதன் முதலில் மனிதனாக அவதரித்த முதல் அவதாரமும் இதுவே! அசுரர் குலத்தில் உதித்த முதல் திருமாலடியானாகிய பிரகலாதனுடைய பேரன் மகாபலி சக்கரவர்த்தி. இவனை மாபலி என்றும் சொல்வர். இவன் தம்முடைய பாட்டனாரைப் போலவே அறநெறி வழுவாது நல்லாட்சி புரிந்து வந்தான். இவனிடம் தோல்வியுற்ற தேவர்கள், திருமாலைத் தஞ்சமடைந்தனர். அசுர வேந்தனை அழித்தருளுமாறு வேண்டினர். இதனை ஏற்ற கார்முகில்வண்ணன் காசிப முனிவருக்கும், அதீதிக்கும் மகனாகப் பிறந்தார்.

குள்ள வடிவம் கொண்டிருந்ததால், வாமனர் எனப் பெயர் பெற்றார்.‘திருமால் வடிவெடுத்த இந்த குள்ள வாமன அவதாரத்தினை, திருஞானசம்பந்தர் பெருமான் ‘‘குறுமாண்டருவன்’’ என்ற பெயரில் சிறப்பித்துப் போற்றுகிறார். இதற்கு பேரழகு பொருந்திய குள்ள உருவமுடைய பிரம்மச்சாரி என்று பொருள். வாமனரைக் குறிக்கும் ‘குறுமான் உருவன்’ எனும் இச்சொல்லாட்சியை பன்னிரு திருமுறை ஆசிரியர்களும் பன்னிரு ஆழ்வார் பெருமக்களும் ‘மாணியாய் மண்ணளந்தவன், ‘பாலனாகி உலகளந்தவன்’, ‘பொல்லாக்குறள் உருவன்’ என்று தங்களது பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் எடுத்தாண்டுள்ளனர்.

தேவர்களைக் காக்க மகாபலியிடம் சென்று மூன்றடி நிலத்தை மட்டும் தானமாகக் கேட்டார். மன்னனும் அவருடைய உருவத்தைக் கண்டு நகைத்தவாறே நீர் வார்த்து தானமளித்தான். குள்ள வாமனர் பேருருவம் எடுத்து ‘திரிவிக்கிரம மூர்த்தியானார்’. ஓரடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியால் மன்னன் மகாபலியின் முடியில் வைத்து அழுத்தினார். அசுரன், பாதாளவுலகிற்குச் சென்றான். அமரர்களின் ஆசையும் அச்சுதனின் அவதார நோக்கமும் நிறைவேறின. வாமன மூர்த்தி தமது அவதார நோக்கம் முடிவுற்றதும், தம் அளப்பரிய ஆற்றலை எண்ணி கர்வமுற்றார். உயிர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். இதனால் அச்சமுற்ற தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர்.

வாமன மூர்த்திக்கு சிவபெருமான் உரிய தண்டனை வழங்கினார். அவருடைய தோலினை தமது ஆடையாகவும், முதுகெலும்பைத் தண்டமாகவும் தரித்துக் கொண்டார். இவ்வாறு வாமனரின் ஆணவம் சிவபெருமானால் களையப் பெற்றது. இவ்வரலாற்றினை திருநாவுக்கரசர் பெருமான் தமது தேவாரப் பாடலில்;

‘‘கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்கா ளராய்
வருங்கடன் மீள நின்று எம்இறை நல்வினை வாசிக்குமே!’’
– என்று புகழ்ந்து பாடுகிறார்.

சிவபெருமானின் இவ்வேக வடிவம் சட்டை நாதர், வடுகநாதர், கங்காள மூர்த்தி என்னும் பெயர்களில் போற்றப்படுகிறது.இப்புராணக்கதை வைணவ இலக்கியங்களில் வேறு விதமாக உள்ளது. கொடுங்கோல் அரக்கர்களைத் தம் வலிமையாலும் வஞ்சகத்தாலும் அழித்து, மற்ற உயிர்களைக் காத்தருள்வது காத்தல் தொழில் புரிபவனான திருமாலின் இயல்பு. இதற்காக அவர் எடுத்ததே தசாவதாரங்கள். இவற்றுள், வாமன அவதாரத்தில் மந் நாராயணன் எந்தவொரு அசுரனின் உயிரையும் பறிக்கவில்லை.

மாறாக தம் மதிநுட்பத்தால், அறநெறி வழுவாத அசுரனை வஞ்சித்து வெற்றி கண்டோர். அவனை உயிருடன் பாதாள லோகத்திற்கு அனுப்பினார் என்பதே இவ்வாமன அவதாரத்தின் சிறப்பு. மகாபலியை வஞ்சித்ததால், தருமத்தைக் கட்டிக் காக்கும் திருமாலின் உள்ளமும் வருத்தமுற்றது. அந்தப் பழியைப் போக்கிக்கொள்ள வேண்டி வாமனர், சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கழிப்பாலை, திருக்கண்ணார் கோயில், திருமாணிக்குழி ஆகிய மூன்று தலங்களுக்கும் சென்று வழிபட்டார். இதனால் தோஷம் நீங்கப்பெற்றார். இது கொள்ளிடம் ஆற்றங்கரையில் சிவபுரியில் உள்ள தலம். ஓங்கி உலகளந்த உத்தமனான திரிவிக்கிரம் மூர்த்தி, திருக்கழிப்பாலை நாதனுடைய திரு வடிகளைத் தொழுது அருள்பெற்ற பிறகே, அனைவரும் போற்றும் வண்ணம் உலகம் முழுவதையும் அளந்துவிட்டான் அச்சுதன்.

இதனை அப்பர் சுவாமிகள், ‘வாமனை வணங்க வைத்தார். வாயினை வாழ்த்த வைத்தார்’ என்று விவரிக்கிறார். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகே உள்ள திருக்கண்ணார் கோயில் எனும் திருத்தலம், காவிரியின் வட கரையில் அமைந்துள்ளது. வாமனர் இத்தலத்துக்கு, தாமே மனம் விரும்பிச் சென்று சிவனை வழிபட்டார். ‘கறுமா கண்டன்மேயது கண்ணார் கோயிலே’ என்னும் தேவாரப்பாடல் குறிப்பிடுகிறது.

குள்ள வாமனரைக் குறிக்கும், `மான்’ என்ற பெயரிலேயே அமைந்த சிறப்புக்குரிய சிவத்தலம் திருமாணிக்குழி. இத்திருத்தல இறைவனை, திரிவிக்கிரமன் வாழ்த்திப் போற்றியதைப் பெரிய புராணம் ‘வாமனாய் மண் இரந்த செங்கண் அவன் வழிபட்ட திருமாணிக்குழி’ என்று உறுதிப்படுத்தியுள்ளது. திருமால், வாமனராக அவதரித்த திருநாளே திருவோணத் திருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணத்திருவிழாவின் நாயகனாகிய வாமனரை, திருநாவுக்கரசர் ‘ஓணப் பிரான்’ என்று சிறப்பு அடைமொழி கொடுத்துப் போற்றுகிறார். விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர் எனும் திருத்தலத்தில், வாமன மூர்த்தி ‘திரிவிக்கிரமன்’ என்ற பெயரில் பெரிய திருக்கோலம் கொண்டு காட்சியளிக்கிறார். ஓரடியால் விண்ணும், மற்றொரு அடியால் மண்ணும் அளந்து, மூன்றாவது அடி வைக்க இடம் கேட்பது போல் இருக்கிறது அவரது தோற்றம். 108-வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்த திருக்கோவிலூர் திரிவிக்கிரம மூர்த்தியின் அவதாரத் தலமாகும்.

வலக்கையில் சங்கமும், இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார். திரிவிக்கிரம மூர்த்தி, திவ்வியப் பிரபந்தம் முதன்முதலில் பாடப் பெற்றது இந்தத் திருக்கோவிலூர் திருத்தலத்தில்தான். முதன்முதலாக, முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து நெடியவன் கருணையை நெஞ்சில் நிறுத்தி துதித்து வழிபட்டதும் இத்தலத்தில்தான். முதல் மூவர் மொழி விளக்கேற்றியதால் ஞான ஒளி வீசும் நற்றலமாக விளங்குகிறது திருக்கோவிலூர்.

The post சிவனை தரிசித்த வாமனர் appeared first on Dinakaran.

Related Stories: