குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, பெண் உதவியாளர் கைது

*விஜிலென்ஸ் போலீசார் அதிரடி

குடியாத்தம் : குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயமுருகன்(38). கிராம நிர்வாக உதவியாளராக இருப்பவர் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி(41).

இந்நிலையில், குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மேகநாதன்(35) என்பவர் அவரது நிலம் அளவீடு செய்து பட்டா மாற்றி தரும்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் சமீபத்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, நிலம் அளவீடு செய்து பட்டா மாற்றி தருவதற்கு விஏஓ ஜெயமுருகன் ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி மேகநாதன் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தபடி ரசாயனம் தடவிய ₹10 ஆயிரம் நோட்டுகளை நேற்று விஏஓ அலுவலகத்தில் விஏஓ ஜெயமுருகனிடம் மேகநாதன் கொடுத்துள்ளார். அதனை விஏஓ வாங்கியபோது அங்கு மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விஏஓ ஜெயமுருகன், அவருக்கு உதவிய உதவியாளர் தேன்மொழி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ, பெண் உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: