பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கும் குடோன்களுக்கு ₹1 லட்சம் அபராதம்

சேலம், செப். 27: சேலம் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கும் குடோன்களுக்கு ₹1லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5வது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. சேலம் மாநகராட்சி 91.36 சதுர கி.மீட்டர் பரப்பளவில் 10லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையினை கொண்டுள்ளது. இங்கு தினமும் 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகரை குப்பையில்லா மாநகரமாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனி நபர் குடியிருப்பு, வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வணிகர்கள் உள்பட அனைவரும் சேலம் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சி பகுதியாக்கும் நோக்கத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, நச்சு தன்னமை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவ கழிவுகளையோ, அபாயகரமான கழிவுகளையோ சாலைகளில் எறிதல் மற்றும் வடிகால்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது. மீறுவோர் மீதுசட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: குப்பைகளை மக்கும் தன்மை உள்ளவை, அபாயகரமான வீட்டு கழிவுகள் என்று தனித்தனியே மக்கள் பிரிக்க வேண்டும். மக்கும் தன்மை உள்ள கழிவுகளை பச்சை நிறக் கூடையிலும், மக்காத தன்மை உள்ள மறு சுழற்சிக்கான குப்பைகளை வெள்ளை நிற கூடையிலும், அபாயகரமான வீட்டுக்கழிவுகளை கருப்பு நிற கூடையிலும் போட வேண்டும். இதற்காக 3வண்ண குப்பை கூடைகளில் சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அல்லது திடகழிவுகள் சேகரிக்க வருபவர்களிடம் வழங்கப்பட வேண்டும். கூடைகள் சொந்த செலவில் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.

கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவுகள் அவர்களது வளாகத்திற்குள் மட்டுமே சேகரித்து வைக்கப்பட வேண்டியதுடன் கட்டுமான மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மை விதிகளின் படி அகற்றப்பட வேண்டும். தோட்டக்கழிவுகள், பூங்கா கழிவுகள் ஆகியவை அவர்களது வளாகத்திற்குள் மட்டுமே சேகரித்து வைக்கப்பட வேண்டும். பின்னர் மாநகராட்சியால் வழங்கப்படும் அறிவுரையின்படி அகற்றப்பட வேண்டும். தேவையற்ற கழிவுபொருட்களான தேங்காய் ஓடு, பயன்படுத்தாக உரல், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் ஆகியவற்றை தனி நபர்களோ, வணிக நிறுவனமோ , தனியார் அலுவலகம், அரசு நிறுவனம் ஆகிய எவரும் கொசுக்கள் உருவாக்கும் வண்ணம் வைத்திருக்க கூடாது.

திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இதன்படி, குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் இருந்தால் வீடுகளுக்கு ₹50, வணிக நிறுவனங்களுக்கு ₹500, வணிக வாகனங்களுக்கு ₹1000 அபராதம் விதிக்கப்படும். சுகாதார கழிவுகளை பிரித்து சுகாதாரமான முறையில் வழங்காமல் இருந்தால் ₹500ம், கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருந்தால் முதல் முறை ₹1000 அபராதம் விதிக்கப்படும்.2வது முறை ₹5000, 3வது முறை ₹10,000 அபராதம் விதிக்கப்படும். தோட்ட கழிவுகள், பூங்கா கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருந்தால் ₹1000 அபராதமும் விதிக்கப்படும். தேவையற்ற கழிவு பொருட்களை நீர் நிலைகள், கழிவுநீர் வடிகால்களில் கொட்டி தண்ணீர் தேக்கமரடைந்து கொசுப்புழு உருவாக்கும் வகையில் வைத்ததால் ₹1000,தொடர் குற்றங்களுக்கு ₹5000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் குற்றத்துக்கு ₹50, பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் குற்றத்துக்கு ₹50, திறந்த வெளியில் மலம் கழித்தல் குற்றத்துக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு முதல் முறைக்கு ₹10,000, 2வது முறைக்கு ₹15,000, 3வது முறைக்கு ₹25,000, தடைசெய்யப்பட்ட பொருட்களை குடோனில் பதுக்கும் நிறுவனங்களுக்கு முதல் முறைக்கு ₹25,000, 2வது முறைக்கு ₹50,000, 3வது முறைக்கு ₹1,00,000 அபராதம் விதிக்கப்படும். இதனை செயல்படுத்தும்வகையில் மாநகராட்சி கூட்டத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கும் குடோன்களுக்கு ₹1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: