மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிலம் வாங்கியது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத்தின் உறவினர் நிலம் வாங்கிய விவகாரத்தில், பத்திரப்பதிவின்போது கோடிக்கணக்கில் பணம் புரண்டது குறித்து வருமான வரித்துறையும். அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்மபுரியை சேர்ந்த டி.சி.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம் கோட்டக்குப்பத்தில் நிலத்தை வாங்கினேன். இதற்காக வானூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் சிலர் இந்த நிலத்துக்காக கடன் கொடுத்துள்ளதாகவும், அதனால் இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.

மீறி பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்றால் பல லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். எனவே, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த மனுதாரர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர். பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர். இவர்கள் பல கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக கூறி பத்திரப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமன்லால் வாதிட்டார். வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வி.சந்திரசேகரன், கே.பிரேம்ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, நிலத்தின் பத்திரங்களை எடுத்துச் சென்று விட்டதாக காலாபட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, புகாரின் அடிப்படையில், காலாபட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் அடிப்படையில், வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும். மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இந்த நிலம் தொடர்பாக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளது குறித்தும், கடன் கொடுத்ததாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post மாஜி அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிலம் வாங்கியது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: