கடன் தொல்லையால் விரக்தி கிணற்றில் குதித்து மருந்து கடைக்காரர் தற்கொலை: வேப்பம்பட்டில் சோகம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து மருந்து கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுகளத்தூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ் என்பவரது மகன் ஐயப்பன் (27). இவர் வேப்பம்பட்டு பகுதியில் சொந்தமாக மெடிக்கல் கடை நடத்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், தர்ஷன் (5) என்ற மகனும், சாருமதி (ஒன்றரை வயது) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தொழில் மற்றும் குடும்ப தேவைக்காக ஐயப்பன் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

அந்த தொகையை செலுத்த முடியாமல் அவர் பிரச்னையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்தில் காணப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி திவ்யாவுக்கு போன் செய்த ஐயப்பன், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள், என்னைத் தேட வேண்டாம் என பேசிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா மற்றும் அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தில் ஐயப்பனை தேடியுள்ளனர். அப்போது வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி பின்புறம் உள்ள கிணறு அருகே ஐயப்பனின் இருசக்கர வாகனம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக திருவூரில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கும், செவ்வாப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாதாள சங்கிலி போட்டு கிணற்றுக்குள் ஐயப்பனை தேடியுள்ளனர். அப்போது அந்த கிணற்றில் இருந்து ஐயப்பன் சடலமாக மீட்கப்பட்டார். அதனைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் ஐயப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ஐயப்பன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கடன் தொல்லையால் விரக்தி கிணற்றில் குதித்து மருந்து கடைக்காரர் தற்கொலை: வேப்பம்பட்டில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: