நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தில் 22 கிலோ கஞ்சா சிக்கியது. இதில், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளடக்கிய 3 மாவட்டங்களின் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலமாக காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பி கோவிந்தராசு மற்றும் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைசாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, சந்தேகத்கிடமான வகையில் நடந்து கொண்ட 2 இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் பேருந்தில் பொருள்கள் வைக்கும் இடத்தில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டையை கைப்பற்றி, 2 இளைஞர்களையும் காவல் துறை வாகனத்தில் ஏற்றி காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஒருவர் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் (20), மற்றொருவர் திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (24) என்பதும், இவர்கள் பல நாட்களாக ஆந்திர மாநிலம் அனங்காபள்ளி பகுதியில் இருந்து போதைப்பொருளான கஞ்சாவை பேருந்து மூலம் கடத்தி வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்து வந்தாகவும், கார் மூலம் கஞ்சா கடத்தி வந்தால் காவல்துறையினரின் கண்களில் சிக்க நேரிடும் என்பதால் தான் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்தில் பதுக்கி எடுத்து வந்ததாகவும் பிடிப்பட்ட இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் கைது செய்து, அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: