ஜென்ம பூமி எக்ஸ்பிரசில் 3 பெட்டிகளில் புகை: பயணிகள் அச்சம்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் லிங்கம்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு ஜென்ம பூமி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலில் அதிகளவிலான பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், ரயில் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏளூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பொது பிரிவு பெட்டியின் அடியில் இருந்து திடீரென குபுகுபு வென புகை கிளம்பியது. சற்று நேரத்தில் புகை அதிகமானதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனால் ரயில் ஏளூர் ரயில் நிலையத்தில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில்வே ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு ரயில் மீண்டும் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ரயில் தாடேபள்ளிகுடம் ரயில் நிலையம் வந்தபோது மீண்டும் 2 பெட்டிகளின் அடியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்து ரயிலில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து 2 பெட்டிகளின் அடியில் இருந்து வெளியேறிய புகையை கட்டுப்படுத்தி நடவடிக்ைக எடுத்தனர். ரயிலின் பிரேக்கில் இருந்து புகை வந்ததாகவும், அந்த பழுது சீரமைக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ரயில் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

The post ஜென்ம பூமி எக்ஸ்பிரசில் 3 பெட்டிகளில் புகை: பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: