கொல்லம் அருகே சரமாரியாக தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதியதாக பொய் புகார்: ராணுவ வீரர், நண்பர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷைன் குமார்(28). இவர் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில் இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷைன் குமார் கடைக்கல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்த 24ம் தேதி இரவு அருகிலுள்ள ஜோஷி என்ற நண்பரை சந்தித்துவிட்டு நான் பைக்கில் எனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் 2 பேர் என்னை வழிமறித்து தாக்கினர். கையிலும் வாயிலும், டேப் போட்டு ஒட்டினர்.

மேலும் என்னுடைய முதுகில் பிஎப்ஐ என பெயின்டால் எழுதி விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அந்தக் கும்பலில் மொத்தம் 6 பேர் இருந்தனர். இவ்வாறு ராணுவ வீரர் ஷைன் குமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். ராணுவ வீரரை தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதுகில் பிஎப்ஐ என எழுதியதால் அது தேசவிரோத சக்திகளின் தாக்குதலாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்பட்டது. இது குறித்து ராணுவ உளவுத்துறையும் விசாரணையை தொடங்கியது. ராணுவ வீரரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட எஸ்பி தலைமையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ராணுவ வீரர் ஷைன் குமாரிடமும், அவரது நண்பர் ஜோஷியிடமும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆனால் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடந்ததற்கான எந்த தடயமும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஜோஷியிடம் நடத்திய தீவிர விசாரணையில் தான் அது பொய்யான புகார் என தெரியவந்தது. அது ஷைன் குமாரின் நாடகம் என்று அவர் போலீசிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கொல்லம் அருகே சரமாரியாக தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதியதாக பொய் புகார்: ராணுவ வீரர், நண்பர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: