காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் பள்ளி மாணவியை கடத்தி கையை அறுத்த வாலிபர்: போலீசார் விசாரணை

பெரம்பூர்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கடத்தி, கையை பிளேடால் அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், சூளையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 2 வருடங்களாக புளியந்தோப்பு சிவராஜபுரத்தை சேர்ந்த அப்பு (எ) இளஞ்செழியன் (19) என்பவருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், அவரை கண்டித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதமாக சிறுமி அந்த நபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இளஞ்செழியன் சிறுமியின் பள்ளிக்கு சென்று, ‘‘நான் சிறுமியின் உறவினர். குடும்ப பிரச்னை தொடர்பாக, அவசரமாக சிறுமியிடம் பேச வேண்டும்,’’ எனக் கூறி வெளியில் அழைத்து வந்துள்ளார். பின்னர், பைக்கில் சிறுமியை ஏற்றிக்கொண்டு பேசின் பிரிட்ஜ் சிவராஜபுரம் 3வது தெருவுக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியிடம், ‘‘ஏன் என்னுடன் பேசுவதில்லை,’’ எனக்கேட்டு தகராறு செய்ததுடன், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளஞ்செழியன், மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுமியின் கையில் சரமாரியாக அறுத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் நள்ளிரவு இளஞ்செழியனை கைது செய்து விசாரிக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் பள்ளி மாணவியை கடத்தி கையை அறுத்த வாலிபர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: