விபத்தில் கை விரல் செயலிழந்ததால் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பெரம்பூர்: விபத்தில் கை விரல் செயலிழந்ததால் விரக்தியடைந்த ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடுங்கையூர் எஸ்.ஏ காலனி 9வது தெருவை சேர்ந்தவர் முகமது காசிம் (35). வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சாய்னா. இவர்களுக்கு ஜிலான் (18) என்ற மகன் உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, பெரம்பூரில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முகமது காசிமுக்கு இடது கையில் அடிபட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இனிமேல் இடது கை கட்டைவிரல் செயல்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த முகமதுகாசிம் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

‘‘என்னால் இனி ஆட்டோ ஓட்ட முடியாது. நான் இருந்து என்ன செய்யப் போகிறேன். நான் சாகப் போகிறேன்,’’ என மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்று, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 75 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முகமது காசிம் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விபத்தில் கை விரல் செயலிழந்ததால் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு: ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: