பருவமழை முன்னெச்சரிக்கை சென்னையில் சாலை பணியை 3 நாளில் முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு பணிகளை வருகிற 30ம் தேதிக்குள் முடிக்கவும், இது தவிர வேறு எந்த சாலை வெட்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தற்போது 75 சதவீத பணிகளை முடித்துள்ளது. மீதமுள்ள பணிகள் வடகிழக்கு பருவ மழைக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயனாவரம் சாலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் குழாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்ததால் அச்சாலையில் சாலை வெட்டுகள் சீரமைப்பு பணி சென்னை மாநகராட்சியால் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தினமும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களின் விவரத்தினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கவும், அதனடிப்படையில் தார் கலவை லாரி மற்றும் இதர சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்குமாறும் மற்றும் பணிகளை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறும் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் சென்னை குடிநீர் வாரியம், கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகள் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா வரை மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் 30ம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார். வேளச்சேரி பிரதான சாலையில் விஜயநகர் சந்திப்பு அருகில் சென்னை குடிநீர் வாரியம் பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதேபோன்று பாடி, மணப்பாக்கம், மனந்தபுரம், முகலிவாக்கம், பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை வருகிற 30ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை சென்னையில் சாலை பணியை 3 நாளில் முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: