நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஆலயங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதற்காக தீர்த்த யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர். கூடவே, அவர் மனைவியும் மகளும் சென்றார்கள். நைமி சாரண்யத்திற்குப் போன அவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ‘ஹத்தியாகான்’ எனும் தீர்த்தத்தில் நீராடி, தெய்வ தரிசனம் செய்தார்கள். அனைத்தையும் முடித்து, அவர்கள் திரும்பும்போது, மாலைப் பொழுதாகிவிட்டது. ஒரு மாட்டு வண்டியில், அவர்கள் நைமிசாரண்யத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரமானது. போய்க் கொண்டிருந்த வண்டியை நிறுத்தி, மாடுகளை அவிழ்த்துவிட்டார் வண்டிக்காரர்.
‘‘என்னப்பா! என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார் முதியவர்.‘‘இங்க, பக்கத்துல தாங்க, எங்க கிராமம் இருக்குது. கொஞ்ச நேரத்துல போயிட்டு வந்துடுறேன்’’ என்ற வண்டிக்காரர், அங்கிருந்து போய்விட்டார். நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர, போன வண்டிக் காரர் திரும்பவில்லை. திடீரென்று ஏதோ சலசலப்பு கேட்டது. பார்த்தால், வண்டிக் காரர் ஏழெட்டு குண்டர்களுடன் வந்து கொண்டிருந்தார். அவர்கள் கைகளில், பெரும்பெரும் தடிகள் இருந்தன. அவர்களைப் பார்த்ததும், முதியவருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும், உடம்பு நடுங்கியது.
‘‘இவர்கள் கொள்ளையடிக்கத்தான் வந்திருக்கிறார்கள்’’ என்பதைப் புரிந்து கொண்டார் முதியவர். உடனே அவர் தன் மனைவியையும் மகளையும் பார்த்து, ‘‘ஆபத்து வந்துவிட்டது. இந்த நிலையில் நம்மைக் காப்பவர், நம் வழிபடு தெய்வமான ராமர் மட்டும்தான். எல்லோருமாக ராம நாமத்தை ஜபம் செய்வோம்!’’ என்றார்.
மூவருமாக, ராம நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கினார்கள். அதே விநாடியில், அங்கு இரண்டு இளைஞர்கள் கைகளில் துப்பாக்கிகளோடு அங்கு வந்தார்கள். அவர்கள் அந்தப் பக்கமாக வேட்டையாட வந்தவர்களைப் போல இருந்தது. கைகளில் துப்பாக்கிகளுடன் வந்த அவர்களைப் பார்த்ததும், வண்டிக்காரரைத் தவிர மற்றவர்கள் ஓடிவிட்டார்கள்.
வந்த இளைஞர்கள், துப்பாக்கிகளை வண்டிக்காரரை நோக்கி நீட்டி, ‘‘அயோக்கியா! தெய்வ தரிசனத்திற்காக வந்த யாத்திரிகர்களைக் கொள்ளையடிக்கவா பார்க்கிறாய்? தொலைத்து விடுவோம் தொலைத்து! ம்..! உடனே வண்டியைக் கட்டி, இவர்களைக் கொண்டுபோய், நைமிசாரண்யத்தில் பத்திரமாகச் சேர்த்துவிடு! அது வரைக்கும் நாங்கள், உன் வண்டியின் பின்னாலே வருவோம்!’’ என்றார்கள்.
உயிர்ப் பயத்தில் வண்டிக்காரர், மாடுகளை வண்டியில் பூட்டினார். முதியவரும் அவர் குடும்பமும் வண்டியில் ஏற, வண்டி புறப்பட்டது. துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள், வண்டியின் பின்னாலேயே வந்தார்கள். நைமிசாரண்யம் வந்ததும், காவலாக வந்த இளைஞர்கள் மறைந்தார்கள்.‘‘நம்மைக் காப்பாற்றியது அந்த ராமரும், லட்சுமணரும்தான். சந்தேகமே இல்லை’’ என்றார் முதியவர். தெய்வம், யாரையாவது அனுப்பி நம் துயரத்தை நீக்கும்!
தொகுப்பு: V.R.சுந்தரி
The post தெய்வம் மனுஷ்ய ரூபம் appeared first on Dinakaran.