மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

மணப்பாறை, செப்.26: மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சியில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு தினம் 2023ஐ முன்னிட்டு மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தப்புடையான்பட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் டமேரிலென்சி தலைமையில் வனவர்கள் செல்வேந்திரன், வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலையில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் முத்தபுடையான்பட்டி பகுதியில் 250 பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி, துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சந்திரசேகர், வனச்சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். துவரங்குறிச்சி: அதேபோல் துவரங்குறிச்சி வனச்சரகம் சார்பில் மருங்காபுரி ஒன்றியம் டி.இடையப்பட்டி பகுதியில் வனச்சரகர் தினேஷ்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Related Stories: