தேன்கனிக்கோட்டை, செப்.26:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூர் அருகே தனியார் பண்ணை உள்ளது. இப்பகுதியில் லேஅவுட் அமைத்து, 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற டாக்டர் விஜய் பணிக்கர்(76) என்பவரது நாய், கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது. நாய் வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், விஜய் பணிக்கர் தேடி பார்த்த போது, லே அவுட்டில் உள்ள ஒரு பகுதியில், நாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் உடலின் ஒரு பகுதியில் இறைச்சியை மர்ம விலங்கு கடித்து தின்றிருப்பதை கண்டு விஜய் பணிக்கர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து, அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை வைத்தனர். ஆனால், மர்ம விலங்கு ஏதும் கேமராவில் சிக்கவில்லை. இந்நிலையில் தனியார் பண்ணை அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, 2 ஆடுகளை கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் லே அவுட்டிற்குள் புகுந்து, நாயை கொன்றது சிறுத்தை தான் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, தனியார் பண்ைண அருகே குவாரிக்கு செல்லும் பாதையில், சிறுத்தை ஒன்று இரவில் ஓடுவதை லாரி டிரைவர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ உண்மைதானா என, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் பீதி appeared first on Dinakaran.