கிருஷ்ணகிரி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒலித்த குரல், தற்போது வடமாநிலங்களிலும் ஒலிக்க தொடங்கியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், நேற்று மாலை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 1750 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமை வகித்தார். தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 1,750 பேருக்கு தலா ₹10 ஆயிரம் பொற்கிழியை வழங்கி விழா பேசியதாவது:
பொற்கிழி வழங்க வாய்ப்பளித்த மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு எனது நன்றிகள். இளைஞர் அணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு, 2019ம் ஆண்டு இந்த மாவட்டத்திற்கு வந்தேன். அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், என்னை அழைத்து 500 பேருக்கு தலா ₹5ஆயிரம் பொற்கிழி வழங்க செய்தார். தற்போது 1750 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை மிகப்பெரிய தொகையாகும். கலைஞரின் ஆட்சியில் இம்மாவட்டத்தில் சிப்காட் 1,2,3 ஆகியவை தொடங்கப்பட்டன. தற்போது இந்த மாவட்டம் பெங்களூருவுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது. கழகத்தின் மூத்த முன்னோடிகளாகிய நீங்கள், இந்த கழகத்தின் வேர்கள் ஆகும். நாங்கள் வேர்வை சிந்துகிறோம். நீங்கள் ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்தீர்கள். உங்களை கவுரவிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.
திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், மருத்துவ உதவியாக ₹50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் மூத்த நிர்வாகிகளுக்கு ₹40 கோடியில் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளை கவுரவிக்கும் ஒரே இயக்கம் திமுக தான். சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி இளைஞர் அணி மாநில மாநாடு நடக்கிறது. நான் மாநில செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் மாநாடு ஆகும். அங்கு வந்து கட்சியின் மூத்த முன்னோடிகள் வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்க தான் இங்கு வந்துள்ளேன். சமீபத்தில் ஒரு கட்சி மாநாடு நடத்தியது. அவர்கள் எப்படி மாநாடு நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதே நாளில், திமுக நீட் விலக்குக்காக போராட்டம் நடத்தியது. அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 குழந்தைகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். இதில் ஜெகதீசன் மறைவால் அவரது தந்தையும் தற்கொலை செய்தார். நீட் விலக்கு அளித்தால் தான் நிம்மதி கிடைக்கும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒலித்த எதிர்ப்பு குரல், தற்போது வட மாநிலங்களிலும் தொடங்கி உள்ளது. அண்ணா, பெரியாரை நான் பார்க்கவில்லை. அவர்களின் வடிவில் நான் உங்களை பார்க்கிறேன். மூத்த நிர்வாகிகளான நீங்கள் இன்றி வெற்றி இல்லை. நீங்கள் இன்றி கழகமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
The post நீட் தேர்வுக்கு எதிரான குரல் வடமாநிலங்களிலும் ஒலிக்கிறது appeared first on Dinakaran.