மாதவரம் சுற்று வட்டார பகுதி சாலைகளில் பழுதடைந்த மின் விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

புழல்: மாதவரம் ரவுண்டானா, ஜிஎன்டி சாலை, மாதவரம், ரெட்டேரி, புழல் சைக்கிள் ஷாப், புழல் மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல்கழனி, செங்குன்றம், பைபாஸ் சாலை, திருவள்ளூர் கூட்டு சாலை, மொண்டியம்மன் நகர், பாடியநல்லூர், நல்லூர் சுங்கச்சாவடி, சோழவரம் பைபாஸ் சாலை, ஆத்தூர் காரனோடை மேம்பாலம் வரை உள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையின் மையப்பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து, கீழே விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்டர் மீடியனில் இருக்கும் மின்கம்பம் ஆபத்தான முறையில் உள்ளது.

பலத்த காற்றடித்தால் இந்த கம்பம், கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பாடியநல்லூர் சோதனைச் சாவடி அருகே சாலையின் மையப்பகுதியில் மின்விளக்கு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த தெரு விளக்குகளை சீரமைக்க நல்லூர் சுங்கச்சாவடி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘மாதவரம் முதல் காரனோடை மேம்பாலம் வரை சாலையின் மையப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் பெரும்பாலான இடங்களில் சாய்ந்து கிடக்கிறது.

மேலும் குறிப்பிட்ட இடங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் சாலையில் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக புழல், தண்டல்கழனி, செங்குன்றம் பைபாஸ் சாலை, காரனோடை மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் சாலையை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் பல மின் கம்பங்கள் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post மாதவரம் சுற்று வட்டார பகுதி சாலைகளில் பழுதடைந்த மின் விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: