பசுமை திட்டத்தின் கீழ் ஊட்டி, கீழ் கோத்தகிரியில் 850 மரக்கன்றுகள் நடவு

*கலெக்டர் துவக்கி வைத்தார்

ஊட்டி : பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டத்தின் கீழ் ஊட்டி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் 850 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இப்பணிகளை கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனங்களின் சுற்றுச்சூழல், சமூகத்திற்கு தூய காற்று, நீர்வளங்கள், வளமான மண், உயிர்பன்மை, வாழ்வதற்கேற்ற சூழல் போன்றவற்றை வழங்குவதாலும், கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துதல்,பருவ நிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு சேவைகளை வனங்கள் வழங்குவதால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனச்சூழலை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் துவக்கப்பட்ட தினம் பசுமை தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டத்தின் கீழ் ஊட்டி அருகே தலைகுந்தா முதல் பைன் பாரஸ்ட் வரை சாலையோரங்கள் மற்றும் காமராஜர் சாகர் அணை கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமை வகித்தார்.

கலெக்டர் அருணா பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தார். இப்பகுதியில் 50 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதே போல் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி பகுதியில் 800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் அருணா கூறுகையில்: தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பசுமை தமிழ்நாடு என்னும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அரசு துறைகளின் மூலம் அதிகளவு மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்று ஊட்டியில் 50 மரக்கன்றுகளும், கீழ் கோத்தகிரி பகுதியில் 800 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மண்வளம் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள மண்ணின் தரத்திற்கேற்ப சோலை இன வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றியடைய பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், அரசு சாரா அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். தொடர்ந்து விழிப்புணர்வு கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் தேவராஜ், ஊட்டி ஆர்டிஒ., மகாராஜ், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பசுமை திட்டத்தின் கீழ் ஊட்டி, கீழ் கோத்தகிரியில் 850 மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Related Stories: