புதுவை அருகே பரபரப்பு போலி மதுபானம் தயாரிப்பு-3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி : போலி மதுபானம் தயாரித்த 3 பேரை கலால் துறை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கலால் துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், போலி மதுபானம் மற்றும் எரி சாராயம் கடத்துவதை தடுக்க தாசில்தார் சிலம்பரசன் மற்றும் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புதுச்சேரி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் காவலர்கள் குமரன், ஏகலைவன், வீரமுத்து ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வில்லியனூர் வி.மணவெளி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், இரண்டாவது குறுக்கு தெருவில் சந்தேகத்திற்குரிய வகையில் மினி லோடுகேரியர் வாகனம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று, வாகனத்தின் பூட்டை உடைத்து பார்த்ததில், உள்ளே 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 வெள்ளை நிற கேன்கள் மற்றும் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீலநிற கேன்கள் என 10 கேன்களில் 380 லிட்டர் எரிசாராயமும், போலியாக தயாரிக்கப்பட்ட 180 மில்லி கொள்ளளவு கொண்ட மதுபானங்கள் 10 அட்டை பெட்டிகள், இரண்டு போலி மதுபானங்கள் தயாரிக்கும் இயந்திரம், தமிழக போலி ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள், தமிழக போலி மதுபான லேபிள்கள் உள்ளிட்டவைகள் இருந்தன. இவைகள் அனைத்தும் தமிழக டாஸ்மாக் மதுபானத்தின் போலி மதுபாட்டில்கள், ஸ்டிக்கர், ஹாலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஒதியம்பட்டை சேர்ந்த சீனு (28), கீழ்அக்ராஹரத்தை சேர்ந்த செந்தில்குமார்(22) ஆகியோர் நடமாடும் வாகனத்தில் போலி மதுபானம் தயார் செய்ய உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை கிடைக்காததால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை கலால் துறை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தமிழகத்தில் இருந்து வில்லியனூர் ஜி.என்.பாளையம் செழியன் (32) என்பவர் அந்த வாகனத்தை ஓட்டிவந்து திருக்காஞ்சி பகுதியில் நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், அனுமந்தை, செட்டியான்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் போலி மதுபான ஆலை நடத்தி வருவதாகவும், ஆங்காங்கே இதுபோன்று தமிழக மதுபாட்டில்கள் என்ற போர்வையில் போலி மதுபானங்களை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே இவர் மீது தமிழகத்தில் போலி மதுபானம் தயாரித்தது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குண்டாஸ் போடப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஜி.என் பாளையம் செழியனை கலால்துறை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜசேகரை ேதடி வருகின்றனர். இதை தொடர்ந்து கலால் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, வண்டி உரிமையாளர் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும், போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கு உள்ளது என்பது குறித்தும், இவர்களுக்கு அரசின் போலி ஹாலோகிராம், ஸ்டிக்கர், எரிசாராயம் ஆகியவற்றை யார் சப்ளை செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட எரிசாராயம், போலி மதுபானங்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மற்றும் வாகனத்தின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்.

The post புதுவை அருகே பரபரப்பு போலி மதுபானம் தயாரிப்பு-3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: