கிருஷ்ணராயபுரம்; செப்.25: தமிழக அரசு மாவட்டம் தோறும் வேளாண்மை கல்லூரி அமைத்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி தொடங்க அமைச்சர் செந்தில்பாலாஜி எடுத்த முயற்சியால் கல்லூரி தொடங்க அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. தற்போது கரூரில் தனியார் இடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. வேளாண்மை கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் வேளாண்மை கல்லூரி அமைக்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி ஊராட்சி, கோரகுத்தி சாலையில் மணவாசி மத்தியபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 120 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க இடத்தை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் ஏற்கனவே மண் பரிசோதனை மேற்கொண்டனர். எனவே மணவாசியில் வேளாண் கல்லூரி அமையுமா? என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் வேளாண்மை கல்லூரி அமைக்க 63 ஏக்கர் கோவில் இடத்தை வருவாய் துறையினர் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியை முடித்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். 63 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீட்டு தொகை கோவிலுக்கு வழங்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே மணவாசியில் வேளாண்மை கல்லூரி அமைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
The post பயணிகள் கோரிக்கை மணவாசியில் வேளாண்மை கல்லூரி அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நிறைவு appeared first on Dinakaran.