திரைத்துறையில் நடிப்பு மற்றும் எழுத்தில் கலைஞரும், சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி: நடிகர் பிரபு பேச்சு

 

பெரம்பூர், செப்.25: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு மேற்கு பகுதி திமுக சார்பில் ‘திரைவானின் விடிவெள்ளி திராவிட தமிழ் பள்ளி’ என்கின்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, கொளத்தூர் அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திமுக சட்டத்துறை துணைச் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சந்துரு தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நடிகர் பிரபு, கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

அப்போது, நடிகர் பிரபு பேசியதாவது: கொட்டும் மழையில் பொதுமக்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தை கேட்க காரணம் கலைஞர் மீது கொண்ட பிரியமே. எனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கலைஞர் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான ஒற்றுமை இருந்தது. குறிப்பாக, எனது தந்தை நடித்தால் அந்த திரைப்படத்தின் திரைக்கதை வசன கர்த்தாவாக கலைஞரே இருப்பார். கலைஞரின் வசனம் என்பது மிகவும் அருமையான ஒன்று. அதற்கு உதாரணமே பராசக்தி, காவேரி போன்ற திரைப்படங்களின் வசனங்களை மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையில் கலைஞரும், சிவாஜியும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டார்கள்.

கலைஞரின் புகழை பறைசாற்றும் வகையில் தொடர்ந்து அவருக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கலாநிதி வீராசாமி எம்.பி, மாநகராட்சி மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சபரிநாத், கொளத்தூர் கிழக்கு பகுதி வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், வழக்கறிஞர் துரைக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திரைத்துறையில் நடிப்பு மற்றும் எழுத்தில் கலைஞரும், சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி: நடிகர் பிரபு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: