சென்னை, செப்.25: சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்டறியும் சோதனை முயற்சியில் சென்னை போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மழைநீர் வடிகால்வாய், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் சாலைகள் சேதமடைந்து, வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, நவீன கருவி மூலம் வாகனங்களின் நெரிசலைக் கண்காணித்து தேவைக்குத் தகுந்தாற்போல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த களப்பணியிலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதோடு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தனியார் நிறுவனத்தைச் (சி.எம்.ஆர்.எல்) சேர்ந்த 600 பேர் (போக்குவரத்து மார்சல்கள்) உதவியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, போக்குவரத்து வார்டன்களும் அவ்வப்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு இருந்தும் சில நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக, ‘டிரோன் கேமரா’ மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கும் புதிய முறையை போக்குவரத்து போலீசார் தற்போது சென்னையில் அறிமுகம் செய்துள்ளனர். முதல்கட்டமாக நந்தனம் சிக்னல் பகுதியில் இது சோதனை ஓட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘டிரோன் கேமராவில் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா போக்குவரத்து நெரிசலை படம் பிடிக்கும். இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து, அதன் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து சென்னை முழுவதும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்’’ என்றனர்.
The post சென்னையின் முக்கிய சாலைகளில் டிரோன் கேமரா மூலம் நெரிசலை கண்டறிய முயற்சி: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.
